இன்று நிலவுக்கு ஏற்படவுள்ள மிகப்பெரிய ஆபத்து! நடக்கப்போவது என்ன?
பல உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக சுற்றி வருகின்றன.
இந்த நிலையில் சுமார் 3 டன் எடைகொண்ட விண்வெளி குப்பை இன்று நிலவின் மீது மோதும் என கடந்த ஜனவரி மாதம் நாசா அறிவித்தது.
கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ‘பால்கன்9 ராக்கெட்டின் மேல்பகுதியான ‘பூஸ்டர் தான் நிலவின் மீது மோத இருப்பதாக நாசா முதலில் தெரிவித்தது.
பின்னர், நிலவில் மோதும் ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் உடையது அல்ல என்றும், அது நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருவதற்காக சீன விண்வெளி ஆய்வு மையத்தால் 2014-ம் ஆண்டு அனுப்பப்பட்ட ராக்கெட்டின் ‘பூஸ்டர் என்றும் நாசா அறிவித்தது.
ஆனால் அதை மறுத்த சீனா, “நிலவில் மோதும் ராக்கெட் எங்களுடையது கிடையாது” என தெரிவித்தது.
இந்த குழப்பத்துக்கு மத்தியில் 3 டன் எடை கொண்ட அந்த விண்வெளி குப்பை இன்று (வெள்ளிக்கிழமை) நிலவில் மோதவுள்ளது.
அதே வேளையில் மணிக்கு 9,300 கி.மீ. வேகத்தில் 3 டன் எடை கொண்ட குப்பை மோதுவதால் நிலவில் 33 அடி முதல் 66 அடி வரையில் பெரிய பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் நிலவில் இருந்து நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு தூசி பரவும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.