ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம்.!!

Keerthi
2 years ago
ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம்.!!

உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இருதரப்பிலும் மோதல் அதிகரித்து உள்ளதால் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்ய நடத்திவரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை, உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி உள்ளனர். ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷிய படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜ்ஜியா மீது ரஷ்யப்படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் விபத்தை விட 10 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை மக்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்புக் கருத்துகள் எழுந்துள்ளதால் ரஷ்ய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.