நாமல் ராஜபக்ஷவிற்கு பிரதமர் வழங்கிய முக்கிய ஆலோசனை
இல.462, புத்தளம் வீதி, யந்தம்பலாவ, குருநாகல் எனும் விலாசத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள குருநாகல் பிரதமர் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு நேற்று முற்பகல் விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலுவலக செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.
இதன்போது பிரதமரின் தலைமையில் குருநாகல் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.
சந்திப்பில் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
குருநாகல் மாவட்டத்தில் தற்போது செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், கிராமத்திற்கு தொடர்பாடல் வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகலில் நிர்மாணிக்கப்படும் 48 தொடர்பாடல் கோபுரங்கள் குறித்தும் இதன்போது மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த செயற்பாடுகளை மேலும் செயற்திறன் மிக்கதாக்குவது தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், இக்கலந்துரையாடலின் போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான நாமல் ராஜபக்ஷவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோபுரங்களை நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.
குறித்த சந்தர்ப்பத்தில் குருநாகல் மாவட்ட பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.