ரஷ்ய நாட்டைச் சேர்ந்த திரைப்படங்களைத் தயாரிப்பது, வெளியிடுவது முதலானவற்றிற்குத் தற்காலிகமாகத் தடை: Netflix
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கும் விதமாக, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த திரைப்படங்களைத் தயாரிப்பது, வெளியிடுவது முதலானவற்றிற்குத் தற்காலிகமாகத் தடை செய்வதாக அறிவித்துள்ளது.
தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் புதிதாக 4 ஒரிஜினல் படைப்புகளை ரஷ்யா நாட்டில் இருந்து தயாரித்து வருகிறது. தாஷா ஷூக் இயக்கியுள்ள க்ரைம் த்ரில்லர் சீரிஸ் ஒன்று சமீபத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு, படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 1990களின் நடைபெறும் திரைக்கதையாக உருவாகியுள்ள இந்த சீரிஸ், ரஷ்யாவில் உருவாக்கப்பட்டிருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது ஒரிஜினல் தயாரிப்பு ஆகும். கடந்த ஆண்டும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் `அன்னா கே' என்ற சீரிஸைத் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கமானவர்களின் தரப்பில், தற்போது உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டிருக்கும் போர் சூழல் காரணமாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.