இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு தாருங்கள்- உக்ரைன் ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்!

Nila
2 years ago
இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு தாருங்கள்- உக்ரைன் ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி  வேண்டுகோள்!

உக்ரைனின் சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு தருமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 12 நாட்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இதுவரை 15,900 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கார்கிவ் மற்றும் சுமியைத் தவிர, உக்ரைனின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். சுமி நகரில் தற்போது சண்டை அதிகரித்துள்ளது. அங்குள்ள மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் கடுங்குளிர், உணவு தட்டுப்பாடு, தண்ணீர் வசதியின்றி தவித்து வரும் நிலை உருவாகியுள்ளது. சுமி நகரில் இருந்து மூன்று மணி நேரம் பயணத் தூரத்தில் உள்ள போல்டாவாவில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டு வருகிறது. சுமி நகரில் உள்ள இந்தியர்களை போல்டாவுக்கு வரவழைத்து அங்கிருந்து எளிதாக இந்தியாவுக்கு அழைத்து வந்து விட முடியும்.


அதேசமயம் அங்கு தீவிர தாக்குதல் நடப்பதால் இந்தியர்கள் வெளியேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

அப்போது சுமியில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு உக்ரைன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான நேரடி பேச்சுவார்த்தை தொடர்வதையும் பிரதமர் பாராட்டியதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 35 நிமிடங்கள் நீடித்த தொலைபேசி உரையாடலில் உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உக்ரைன் அரசு செய்த உதவிக்கு பிரதமர் மோடி ஜெலன்ஸ்கிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இதுமட்டுமின்றி இரு தலைவர்களும் உக்ரைனில் உருவாகி வரும் நிலைமை குறித்தும் விவாதித்தனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான நேரடி பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என தமது விருப்பத்தையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!