இலங்கை மக்களை அவதிக்குள்ளாக்கும் ராஜபக்ச அரசாங்கம்: மக்கள் விசனம்

Mayoorikka
2 years ago
இலங்கை மக்களை அவதிக்குள்ளாக்கும்  ராஜபக்ச அரசாங்கம்: மக்கள் விசனம்

ஸ்ரீலங்காவில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்ற நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான டீசல் மற்றும் பெற்றோல் விலையை அதிகரித்துள்ளாக இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் ஏனைய நிறுவனங்களின் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கபட்டுள்ளது.

இதேவேளை, கோதுமை மா, வெதுப்பக உற்பத்திகள், சமைத்த உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிப்பை எதிர்நோக்கியுள்ளன.  

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலையை லங்கா இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, ஒரு லிட்டர் டீசலின் விலை 75 ரூபாவாலும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில், ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 110 ரூபா முதல் 130 ரூபாவிற்கு இடையில் அமையவுள்ளது.

இதேவேளை, கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபா தொடக்கம் 45 ரூபாவிற்குள் அதிகரிக்கப்படுமென பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சமைத்த உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொதி ஒன்றின் விலையை 20 ரூபாவாலும், கொத்து ஒரு பொதியின் விலையை 10 ரூபாவாலும், சிற்றுண்டிகளின் விலையை 05 ரூபாவாலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது.

முச்சக்கரவண்டியின் முதல் 1 கிலோ மீட்டருக்கான கட்டணத்தை 80 ரூபாவால் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இரண்டாவது கிலோமீற்றர் முதல் 50 ரூபாயை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால்,  விமான பயணச்சீட்டுகளின் விலை 27% அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

மருந்துப்பொருட்களின் விலையை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டுச் சபை அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதற்கான உதிரிபாகங்களின் விலைகளை அதிகரிக்க கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதற்கமைய, கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலைகளை 30 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றம் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. 

இந்த நிலையில், தொடர்ச்சியாக டொலரின் விலை அதிகரிக்கும் நிலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கின்றமை வழமையான விடயமாக மாறியுள்ளது. 

இதேவேளை, டொலரின் விலை 260 ரூபாவாக நிலையாக இருக்கும் போது ஸ்ரீலங்கா அரசாங்கம் வரிக்குறைப்பு அல்லது நிவாரணத்தை வழங்காத பட்சத்தில் ஸ்ரீலங்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தது 29 ரூபாவால் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 800 ரூபாவால் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 44 ரூபாயாலும், ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 101 ரூபாயாலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட் விலையை 300 ரூபாவால் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் ஏற்கனவே தயாராகியுள்ளது.

இதற்கமைய, 400 கிராம் எடையுடைய பால் மா பக்கெட் விலை 120 ரூபாவால் அதிகரிக்கும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நாணய மாற்று வீதம் சுதந்திரமாக தீர்மானிக்கப்படுவதற்கு இடமளிப்பதாக ஸ்ரீலங்கா மத்திய வங்கி அறிவிக்கும் முன்னர் கூடிய அமைச்சரவை வௌிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பி வைக்கும் டொலருக்கு வழங்கப்படுகின்ற விசேட கொடுப்பனவை 38 ரூபா வரை அதிகரிப்பதற்கு தீர்மானித்தது.

எனினும், நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்ற டொலருக்காக வழங்கப்பட்டு வந்த 10 ரூபா கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டதாக அனுமதிப்பத்திரம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி ஆளுநர் கடிதம் மூலம் அறிவித்தார்.

இது இவ்வாறிருக்க வௌிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பி வைக்கும் டொலருக்கு 20 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக எரிவாயு இறக்குமதிக்கு நாணயக் கடிதங்களை வழங்குவதனை கடந்த வாரம் வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தியதை அடுத்து எரிவாயு விநியோகத்தில் சிக்கல் நிலை தோன்றியிருந்தது. 

நாணய மாற்று வீதத்தை சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்திற்கு அமைய நெகிழ்வுப் போக்குடன் தீர்மானிப்பதற்கு இடமளிக்கப்பட்டதையடுத்து, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபா வரை அதிகரித்திருந்தது.

இதற்குத் தீர்வாக வௌிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பி வைக்கும் டொலர் மற்றும் ஏற்றுமதி வருமானத்தின் மூலம் கிடைக்கும் டொலருக்கு மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவை அரசு அறிவித்தாலும், எதிர்பார்க்கப்பட்டவாறு டொலர்கள் நாட்டை வந்தடையவில்லை.

ஆகவே இந்த நிலைமைத் தொடரும் பட்சத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட எச்சரிக்கைகளுக்கு அமைய எரிவாயு, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான பொருட்களின் விலைகளும் மேலும் அதிகரிக்கும்.  

இதேவேளை அத்தியாவசியமற்ற பொருட்கள் என தெரிவித்து அப்பிள், திராட்சை பழங்கள் உள்ளிட்ட 367 பொருட்களுக்கு அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், நிலையில் தாம் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த பொருட்களுடன் இணைந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

பழங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தன்னை நம்பி தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் பாதிப்பினை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பழ மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதால் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள் நான்கு மடங்கு அதிகரிக்குமென மற்றுமொரு மொத்த வியாபாரி தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தின் இந்த தடைக் காரணமாக, சுமார் 50 இலட்சம் பேர் தொழில்வாய்ப்பை இழக்க நேரிடும் என மற்றுமொரு தொழிலாளி தெரிவிக்கின்றார். 

இந்நிலைமை தொடருமாயின் அடிப்படை சாதாரண மக்கள்   பஞ்சம் பசி பட்டினியில் மக்கள் இறக்க நேரிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.