நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு - மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கும் ஆப்பு வைத்த பசில்!

#SriLanka #Basil Rajapaksa #Ajith Nivat Cabral
Nila
2 years ago
நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு - மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கும் ஆப்பு வைத்த பசில்!

நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தவிர்க்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுவடைந்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய வங்கி ஆளுநர் தொடர்ந்தும் உள்ளார்.

இதனால் பசில் ராஜபக்ஷ கடும் சீற்றம் அடைந்துள்ளதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டு தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

ராஜதந்திரிகளின் விஜயத்திலும் முரண்பாடு தீவிரம் அடைந்துள்ளது. இலங்கை வரும் அதிகாரிகள், எதிர்வரும் திங்கட்கிழமை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் எதிர்காலத்தில் கடன் உதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய பிரேரணையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிய வருகிறது.

கடன்களை மறுசீரமைக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கை செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க பசில் ராஜபக்ஷ தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதனை மறுத்துள்ள மத்திய வங்கி ஆளுநர், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவில்லை என தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் ஊடாகவும் நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பசில் ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.