இன்றைய வேத வசனம் 13.03.2022: தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்
ஒரு ஏழை விதவை தாயார், துன்மார்க்கமாக அலைந்து திரிந்து கொண்டிருந்த தன்னுடைய மகனுடைய இரட்சிப்புக்காக, உபவாசம் பண்ணி, மிகுந்த கண்ணீரோடு ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் ஜெபிக்க, ஜெபிக்க, அவன் இன்னும் துன்மார்க்கனாகவே மாறிக் கொண்டிருந்தான். ஆனால், அந்த தாயிற்கு இருந்த விசுவாசம் குறையவில்லை.
அந்தத் தாயாரும் விசுவாசத்தோடு தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று ஒருநாள், அவன் குடி போதையில் யாரிடத்திலோ சண்டை போட்டு, குற்றுயிரும், கொலையுயிருமாக இரத்த வெள்ளத்தில் கிடந்த அவனை சிலர் தூக்கிக் கொண்டு வந்து, அவனுடைய தாயாரிடத்தில் ஒப்படைத்தார்கள்.
பெற்ற தாய்க்கு எப்படி இருந்திருக்கும்? என்னுடைய ஜெபமெல்லாம் என்ன ஆயிற்று? நான் வடித்த கண்ணீர் எல்லாம் வீணாகப் போய் விட்டதோ?
என் மகன் மாறுவான்! இரட்சிக்கப்படுவான்! என்று மிகுந்த விசுவாசத்தோடு காத்திருந்தேனே! இப்போது, தன்னுடைய துன்மார்க்கத்திலேயே என் மகன் சாகப் போகிறானே! என்று சொல்லி அங்கலாய்த்து, அழுது புலம்பினார்கள்.
அந்த சமயத்தில், அந்த தாயாருக்கு ஒரு தேவ வார்த்தை ஞாபகத்தில் வந்தது.
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 8:28)
அந்த தேவ வார்த்தையை வேத புத்தகத்திலிருந்து திறந்து திரும்பத் திரும்ப படித்து தியானிக்க தொடங்கினார்கள்.
முடிவு நன்மையாகவேதான் இருக்கும். ஆகவே, என் மகனை இந்த நிலைமைக்கு நீர் கொண்டு வந்திருப்பதிலும் ஒரு நோக்கம் இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். என்று சொல்லி கர்த்தரைத் துதித்து, ஸ்தோத்திரம் பண்ணினார்கள். விசுவாசத்தோடு இருந்தார்கள்.
ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த அவன் பல மணி நேரங்கள் கழித்து கண்களைத் திறந்து அருகிலிருந்த தன் தாயாரைப் பார்த்து, தன் வாழ்க்கையில் முதன்முறையாக, அம்மா, எனக்காக ஜெபம் பண்ணுங்கள். என்று சொன்னான்.
முன்பெல்லாம், ஏன் எப்பொழுதும் ஜெபம் பண்ணிக் கொண்டே இருக்கிறாய்? என்று சொல்லி, தன் தாயாரை அடிப்பான்.
இயேசு கிறிஸ்துவைப் பற்றி யாருமே அவனிடத்தில் பேச முடியாது. அப்படிப்பட்ட அவனை கர்த்தர் நொருக்கச் சித்தமாகி, அவனுடைய மரணப் படுக்கையில் சந்தித்தார்.
அன்றைக்கு அந்த வாலிபன் தன் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தான். அற்புதமான ஒரு சாட்சியாக கர்த்தர் அவனை மாற்றி விட்டார். அந்த தாயாருடைய உள்ளத்திற்குள் ஒரு பெரிய சந்தோஷம் வந்தது.
பாருங்கள், அந்தத் தீமையை கர்த்தர் நன்மையாக முடியப் பண்ணினார்.
நண்பர்களே, இன்றைக்கு நீங்களும் கூட, உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபித்து, ஜெபித்து, ஒன்றுமே நடக்கவில்லையே! எல்லாம் எதிர்மாறாகத்தானே நடக்கிறது! என்று சொல்லி கலங்குகிறீர்களா? கலங்காதிருங்கள்! முடிவு நன்மையாகவேதான் இருக்கும்!
நீங்கள் இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூருகிறீர்களா? அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குத்தான் அப்படி நடக்கும்.
நீங்கள் அவரை நேசிக்க வேண்டும். ஏன் தெரியுமா? கல்வாரி சிலுவையில் அவர் உங்களுக்காக தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தார்!
தன் கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட ஒப்புக் கொடுத்தார்! தன் தலையில் முள்முடியை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொடுத்தார்!
உங்களுக்காக தன்னையே வாரினால் அடிக்கப்படவும், நொருக்கப்படவும், காரித் துப்பப்படவும் ஒப்புக் கொடுத்தார்!
உங்கள் மீது இவ்வளவாக அன்பு கூர்ந்து, உங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தாரே, அதற்காக அவரிடத்தில் அன்புகூருகிறீர்களா?
உங்களுக்காக தன்னையே பலியாகக் கொடுத்த இயேசு கிறிஸ்துவை நீங்கள் உண்மையாக நேசிக்கிறீர்களா? அல்லது வெறும் உலகப் பொருட்களுக்காக , சரீர சுகத்திற்காக, நன்மைக்காக, வேலைக்காக, சம்பாத்தியத்திற்காக, பணத்திற்காக அவரை நேசிக்கிறீர்களா? யோசித்துப் பாருங்கள்!
கர்த்தாவே, நீர் எதுவுமே எனக்குத் தரா விட்டால் கூட நான் உம்மை நேசிப்பேன். எனக்காக விலையேறப் பெற்ற உம்முடைய இரத்தத்தைச் சிந்தி, ஜீவனையே கொடுத்திருக்கிறீர்!
நான் உம்மை மனதார நேசிக்கிறேன்! என்று சொல்லிப் பாருங்கள், முடிவு நன்மையாக இருக்கும்.
ஆம், அவரிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது! ஆமென்!!!