இன்றைய வேத வசனம் 14.03.2022: அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும் பகலும் அழுவேன்
இலக்கிய விருது பெற்ற ஒரு எழுத்தாளரின் பேட்டியை பார்த்துக் கொண்டிருக்கும்போது கிறிஸ்தவத்தை குறித்த கூற்று ஒன்றை அவர் வெளிப்படுத்தினார்.
கிறிஸ்தவம் என்றால் அழுகை என்ற அவரின் பதில் எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியையும் இன்னொரு பக்கம் பெரும் கேள்விக் குறியையும் எழுப்பியது. அதற்கு ஆதாரமாக இயேசுகிறிஸ்து அழுவதையும் இயேசு கிறிஸ்துவை பின்பற்றியவர்கள் சில இடங்களில் அழுவதையும் அவர் மேற்கோள் காட்டினார்.
தெற்காசியாவில் தோன்றிய சமயங்கள் எல்லாம் பேரானந்தத்தைத் தருபவை. ஆனால் மேற்கத்திய சமயமாகிய கிறிஸ்தவம் அழுகையை அடிப்படையாகக் கொண்டது என்ற அவரின் கூற்று ஒரு பாதி உண்மையும் மறுபாதி விமர்சனத்துக்குமுரியது.
பாவத்திலிருந்து ஒரு மனிதன் விடுபடும் போது அவன் அதற்காக துக்கப்பட்டு கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருப்பதை பரிசுத்த வேதாகமம் போதிக்கிறது. அதை இந்த உலகம் கேவலமாக பார்க்கிறது. அதே சமயம் ஆவிக்குரிய துக்கத்தை கடந்து விட்ட பின் அவனுக்கு அருளப்படும் சமாதான சிலாக்கியங்களை இவ்வுலகம் பார்க்கவும் தவறுகிறது.
இயேசுவைப் பின்பற்றுதலை விட பேரானந்தம் இந்த உலகத்தில் இல்லை. அதை அனுபவித்தவர்கள் மட்டும்தான் அகில உலகமும் பறைசாற்ற முடியும்.
அதேசமயம் கண்ணீர் கிறிஸ்தவத்தின் மையப்புள்ளியாக இருக்கிறது. அது நம் சொந்த கவலைகளுக்காக தன் கண்களிலிருந்து வழியும் நீர்த்துளிகள் அல்ல, மற்றவர்களை ஆன்மிக கரைக்கு இழுத்துச்செல்ல வேண்டுமே என இதயம் ஏங்கும்போது கண்கள் வடிக்கின்ற பாரத்தின் துளிகள்.
எரேமியா தீர்க்கதரிசன புத்தகத்தை திறக்கும்போதெல்லாம் ஒரு வசனத்தை கடந்து போக முடியாமல் பலமுறை திணறி இருக்கிறேன். “ஆ என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்” எத்தனை ஆழமான அதேசமயம் உடைந்த இதயத்தின் வெளிப்பாடு பாருங்கள்! "அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும் பகலும் அழுவேன் ” (எரேமியா 9:1).
நற்செய்திப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோர் கண் கலங்காமல் இந்த இடத்தை கடந்து போகவே முடியாது! வேத புத்தகத்தில் எரேமியா தீர்க்கதரிசி அழுகின்ற தீர்க்கதரிசியாக சித்தரிக்கப்படுகிறார்.
தன் ஜனத்துக்காக ஏங்கி ஏங்கி அழுகின்ற ஒரு தீர்க்கதரிசி! தன் ஜனத்தின் நிலை அவரின் கண்களை கண்ணீர் ஊற்றாகவே மாற்றிவிட்டது! இங்கே முக்கியமாக நாம் கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்: நம் சொந்த ஜனத்தின் இன்றைய நிலைக்காய் நாம் அழக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே!
எரேமியா தீர்க்கதரிசன புத்தகம் முழுவதையும் நீங்கள் வாசிப்பீர்கள் என்றால் நம் நாட்டின் முந்தைய பதிவாகப் பார்க்கமுடியும். சோரம்போன தன் ஜனத்தை கண்டித்து உணர்த்தும் தீர்க்கதரிசனங்களுக்கு மத்தியில் எரேமியாவின் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்திருக்கிறது.
ஆத்தும ஆதாயப் பணியின் முதல் தேவையே பாரமுள்ள ஓர் இருதயம் தான். இருதயம் நொறுங்கி அழுது ஜெபிக்க முடியாதவர்கள் ஆத்தும ஆதாயப் பணியில் முழு வெற்றி பெற்ற சரித்திரமே இல்லை!
அறை வீட்டுக்குள் குலுங்கி குலுங்கி அழுது ஜெபித்தவர்களால் தான் ஆண்டவரின் ராஜ்ஜியத்திற்குள் அலையலையாக மனிதர்களைச் சேர்க்க முடிந்திருக்கிறது.
இன்றைய ஊழியர்களும், ஊழியங்களும், சீடர்களும், இழந்த பெரும் இழப்பு ஆத்துமாக்களை நினைத்து கண்ணீர் சிந்தும் குணாதிசயத்தைத்தான்.
ஆத்தும பாரம் இல்லாமல் துவங்கப்படும் மிஷனெரி இயக்கங்கள், ஊழியங்கள் கிறிஸ்தவத்தின் சாபங்களே.
இன்று ஒரு ஊழியத்தை எளிதாக துவங்கி, 4 ஊழியர்கள் இருக்கிறார்கள் என்று 10 புகைப்படங்களைக் காட்டி சில லட்சங்களை சில நிமிட நேரங்களுக்குள் மக்களை ஏமாற்றி பெற்றுவிடும் பொய்யர்கள் பெருகி இருக்கிறார்கள்.
ஆனால், கண்ணீர் எங்கே? இந்தப் பெரிய ஜனக் கூட்டத்திற்காக அழுகின்ற மனிதர்கள் எங்கே? அறையைப் பூட்டிக்கொண்டு இந்த தேசத்தின் மீட்புக்காக அழுகிறவர்கள் எங்கே?
அலையலையாய் பெரும் தொற்று பரவி கொத்துக்கொத்தாய் மக்களை அள்ளிக் கொண்டு பாதாளத்திற்குள் போகும்போது இந்த ஜனத்தை நினைத்து மார்பில் அடித்து புலம்புபவர்கள் எங்கே ?
அன்பிற்குரியவர்களே, ஒரு வருடத்தின் துவக்கமே கார்மேகம் சூழ்ந்ததாகவும் கவலைகள் பெருகுகின்றதாகவும் இருக்கும்போது நாம் உணர வேண்டியது : இது கடைசி காலம் - கண்கள் கண்ணீரைப் பெருக்க வேண்டிய காலம்! ஆத்துமாக்களுக்காக நடக்கும் பெரும் போரில் அழிகின்ற ஆத்துமாக்களை கொடியவன் கையிலிருந்து பறித்து பரலோகத்துக்கு அனுப்பி வைக்க அதி தீவிரம் கொள்ள வேண்டிய காலம்!
இனிவரும் காலங்களில் நமது செயல்பாடுகள் அனைத்தும் சுவிசேஷ ஊழியத்தை நோக்கி இரட்டிப்பாய் பெருகட்டும்.
தேவன் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவாராக. தீமைக்கு விலக்கி பாதுகாத்துக் கொள்வாராக. தீர்க்காயுசையும், நற்சுகத்தையும் நிறைவாய் தருவாராக. ஆமென்!