இன்றைய வேத வசனம் 15.03.2022: உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு 5:16
தன்னுடைய இளம்பிராயத்தில் மேக்னாவுக்கு பிரியமான ஞாயிறு சிறுவர்பள்ளி ஆசிரியை ஒருமுறை சுவிசேஷம் அறிவித்தலைக் குறித்த பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். அதில் சில வசனங்களை மனப்பாடம் செய்யும்படியாகவும், சிலயுக்திகளைக் கையாளும்படியும் சொல்லியிருந்தார்.
மேக்னாவும், அவளுடைய சிநேகிதியும் அந்த யுக்திகளைக் கையாண்டு மற்றொரு சிநேகிதிக்கு பயத்துடன் சுவிசேஷத்தை பகிர்ந்துகொண்டனர். ஆனால் அந்த சுவிசேஷ பகிர்வு மனமாற்றத்தில் முடிவடைந்ததாய் தெரியவில்லை. இந்த யுக்திகளை நினைவுபடுத்தி சுவிசேஷம் சொல்வது ஆக்கபூர்வமானதாய் தெரியவில்லை.
ஆனால் காலங்கள் சென்று தற்போது மேக்னாவும், அவளது கணவனும் தேவனை நேசிப்பதற்கும் சுவிசேஷத்தைப் பகிர்வதற்கும் தங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் செயல்படுகின்றனர். தங்கள் பிள்ளைகளுக்கு தேவனைக் குறித்தும், வேதத்தைக் குறித்தும், இயேசுவுடனான தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும் போதிப்பது அவசியம் என்று அறிந்திருந்தார்கள்.
ஆனால் அதை அன்றாட வாழ்க்கையின் மூலமும், தேவனுடைய அன்பையும், வேதத்தையும் நடைமுறைப்படுத்துவதின் மூலமும் போதித்தனர். “நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத்தேயு 5:14) என்றால் என்ன என்பதையும் மற்றவர்களை தயவான வார்த்தையின் மூலம் அணுகுவது எப்படி என்பதையும் வாழ்ந்து காண்பித்து நிரூபித்தனர்.
“நாம் கடைபிடிக்காவிடில் ஜீவனுக்கேதுவான வார்த்தைகளை போதிக்க முடியாது” என்று மேக்னா கூறுகிறார். தங்களுடைய வாழ்க்கையில் தயவையும், இரக்கத்தையும் காண்பித்து மற்றவர்களை தங்களுடைய நம்பிக்கைக்குள்ளாக ஈர்ப்பதற்கு தங்கள் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துகின்றனர்.
மற்றவர்களை இயேசுவிடம் நடத்துவதற்கு நமக்கு பிரத்யேகமான யுக்திகள் தேவையில்லை. நம்மை நெருக்கி ஏவி, நம் மூலமாய் பிரகாசிக்கும் தேவ அன்பே முக்கியம். நாம் வாழ்ந்து, அவருடைய அன்பை பிரதிபலிக்கும்போது, அவரை அறிகிற அறிவிற்குள்ளாய் தேவன் மற்றவர்களை நம் மூலம் கொண்டுவரச் செய்வார்.