இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது
இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (16) நண்பகல் 12 மணிக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் தமக்கான போக்குவரத்து கொடுப்பனவுகள் அதிகரித்துத் தருவதாக பெற்றோலிய துறை அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்ததை அடுத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நிறைவுக்கு கொண்டு வந்ததாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.
அதிகரித்து வரும் டீசல் விலை மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி காரணமாக போக்குவரத்து கட்டணத்தை 60% ஆக அதிகரிக்குமாறு கோரி கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், அமைச்சர் காமினி லொக்குகே, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கத்தினருக்குமிடையே இன்று முற்பகல் அவசர பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு போதிய போக்குவரத்து கொடுப்பனவுகளை பெற்றுத்தருவதற்கு அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்துள்ளார்.