4,00,000 பேர் தண்ணீர், மின்சாரம், எரிவாயு இன்றி கடுமையான சூழலில் உக்ரேனிய மக்கள்
யுக்ரேனின் மேரியோபோலில் ரஷ்யப் படைகள் கைப்பற்றிய மருத்துவமனையில் சுமார் 400 பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் சிக்கியுள்ளனர்.
ரஷ்யப் படைகள் “தற்போது மருத்துவமனையிலிருந்து யுக்ரேனிய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கிசூடு நடத்திவருகிறது” என, யுக்ரேன் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
மேரியோபோல் நகரத்தில் சுமார் 4,00,000 பேர் தண்ணீர், மின்சாரம், எரிவாயு ஆகியவை தீர்ந்துபோய் கடுமையான சூழலில், வெளியேற வழியின்றி உள்ளனர். அங்குள்ளவர்களை தொடர்புகொள்வதும் மிகடும் கடினமானதாக உள்ளது.
தன்னுடைய 57 வயது தாய் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்த டிமிட்ரோ ஹோர்ஷகோவ், தீவிர சிகிச்சைக்காக பிராந்திய மருத்துவமனைக்கு அவரை அழைத்ததாகவும், ஆனால், பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். தன்னால் தொடர்புகொள்ள முடிந்த நண்பர்களிடமிருந்து அவர் சமீபத்திய தகவல்களை பெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.
“பல தகவல்கள் வெளியே வருவதில்லை” என அவர் தெரிவித்தார். “மேரியோபோலில் எனக்கு சிலரை தெரியும். அவர்களின் பெற்றோர்கள் மருத்துவப் பணியாளர்களாக உள்ளனர், அவர்களும் மருத்துவமனையில் உள்ளனர். தற்போது, காயமடைந்த தங்கள் படையினரை ரஷ்யப் படைகள் அந்த மருத்துவமனைக்கு அனுப்புகின்றன. இந்த மருத்துவமனையில் மிகச் சிறந்த வசதிகள் உள்ளன. மருத்துவமனையின் நிர்வாகக் குழுவினர் அடித்தளத்தில் உள்ளனர்” என அவர் தெரிவித்தார்.
உணவு மற்றும் மருந்துகள் வேகமாக தீர்ந்துவருகின்றன, அந்நகரத்தில் எந்தவொரு மனிதநேய உதவிகளும் அனுமதிக்கப்படுவதில்லை.அங்குள்ள நிலைமை “கெட்ட கனவு” போன்று உள்ளதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது...
இதேசமயம்...யுக்ரேனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர்கள் (612 மில்லியன் பவுண்ட்) மதிப்புக்கு பாதுகாப்பு உதவிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுக்ரேன் அதிபர் வொலாடிமிரி ஸெலென்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று பேச உள்ள நிலையில், இந்த முடிவு வெளியாகியுள்ளது.
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் யுக்ரேனுக்கு சிறப்பான விதத்தில் பயன்பட்ட ஜாவ்லின் மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகள் உள்ளிட்ட கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகளை அதிகளவில் வழங்குதல் ஆகியவை இந்த பாதுகாப்பு உதவிகளில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஸ்விட்ச்பிளேடு என அழைக்கப்படும்,ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான ட்ரோன்களும் யுக்ரேன் ராணுவத்திற்கு வழங்க அமெரிக்க வெள்ளை மாளிகை யோசித்துவருவதாக, அமெரிக்க ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே யுக்ரேனுக்கு கடந்த வாரம்சுமார் 1 பில்லியன் டாலர்கள் (766 மில்லியன் பவுண்ட்) ஒதுக்க பைடன் நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதேசமயம்..ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் பியர் ஸக்ர்ஸேவ்ஸ்கி (55) மற்றும் ஒலெக்ஸாண்ட்ரா குவ்ஷினோவா (24) ஆகியோர், பணியில் ஈடுபட்டிருந்தபோது, கீயவ் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹோரென்காவில் ரஷ்ய தாக்குதலின்போது அவர்களுடைய காரில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.
அவர்களுடன் உடன் பணிபுரியும் பெஞ்சமின் ஹால் (39) என்பவர், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஃபாக்ஸ் நியூஸ் தலைமை செயல் அதிகாரி சூசேன் ஸ்காட் இச்சம்பவம் “நெஞ்சை பிளப்பதாக” உள்ளது என தெரிவித்தார்.
ஒரு ஊடகவியலாளராக ஸக்ர்ஸேவ்ஸ்கியின் “ஆர்வமும் திறமையும் ஈடுசெய்ய முடியாதது” என அவர் தெரிவித்தார்.
“பியர் ஸக்ர்ஸேவ்ஸ்கி போர் புகைப்படக் கலைஞர். ஈராக் முதல் ஆப்கானிஸ்தான், சிரியா வரை அவர் எங்களுடன் இருந்த இந்த நீண்ட காலத்தில், ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அனைத்து சர்வதேச செய்திகளையும் வழங்கியுள்ளார்” என தெரிவித்தார்.
இத்தாக்குதலில் உயிரிழந்த ஒலெக்ஸாண்ட்ரா குவ்ஷினோவா குறித்து ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் தேசிய பாதுகாப்புப் பிரிவு நிருபர் ஜெனிஃபர்கிரிஃபின் கூறுகையில், “அவர் திறமையான ஊடகவியலாளர். எங்களின் இழப்பு குறித்து வார்த்தைகளில் விவரிக்க முடியாது” என தெரிவித்தார்.
பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யப் படைகள் தனது தாக்குதலை தொடங்கியதிலிருந்து, யுக்ரேனின் வட-கிழக்கு நகரமான கார்கீவில் 500 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என, அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை குறித்து பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை.யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமாக கார்கீவ், கடந்த சில வாரங்களாக கடுமையான ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. எனினும், வெடிபொருட்கள் பற்றாக்குறை காரணமாக ரஷ்யப் படை அந்நகரத்தை சுற்றிவளைக்க போராடிவருகிறது.
கார்கீவில் உள்ள நெமிஷ்லியான்ஸ்க் மாவட்டத்தில் பல்லடுக்கு மாடி கட்டடத்தில் நடைபெற்ற ஷெல் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக, அவசர சேவை பிரிவு சமீபத்தில் வெளியிட்ட தினசரி பதிவில் தெரிவித்துள்ளது.
யுக்ரேனில்இதுவரை குறைந்தது 691 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், சுமார் 1,143 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும், ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.