உக்ரைனுக்கு வெற்றி - ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக - ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உக்ரைன் மீது ரஷியா இன்று 21-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன. மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தங்கள் நாட்டில் ரஷியா இனப்படுகொலை நடத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டிய உக்ரைன், போரை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரியும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த விசாரணையை தொடர்ந்து உக்ரைன் மீது நடத்திவரும் ராணுவ நடவடிக்கையை ரஷியா உடனடியாக நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்வதேச கோர்ட்டில் இந்த உத்தரவை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதல் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.