இன்றைய வேத வசனம் 18.03.2022: திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்
திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; உன்னதப்பாட்டு 2:15
விமானி தன் தேநீர் கோப்பையை அதின் இருக்கையில் வைக்க முடியவில்லை. எனவே அதை கட்டுப்பாட்டின் பகுதியில், நடுவிலே வைத்தார். விமானம் சற்று தடுமாறியபோது, தேநீர் கோப்பை கவிழ்ந்து, அதிலிருந்த தேநீர் கட்டுப்பாட்டு பலகையில் சிந்தி, இயந்திரத்தை பழுதடையச் செய்தது. விமானம் சற்று தடுமாறி, கடைசியில் தரையிறக்கப்பட்டது.
அதேபோன்ற ஒரு சம்பவம் வேறொரு விமானத்திற்கு ஏற்பட்ட பின்னர், அந்த விமானத்தின் கட்டமைப்பாளர்கள் பிரச்சனை என்ன என்பதை உணர்ந்தனர். 30கோடி விலைமதிப்புள்ள விமானத்தில் தேநீர் கோப்பை வைக்கும் இருக்கை சிறியதாக இருந்தது. இந்த சிறிய தவறானது பெரிய பிரச்சனைகளுக்கு மூலகாரணமாய் அமைந்தது.
சிறிய விஷயங்கள் சிலவேளைகளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உன்னதப்பாட்டின் நேசர் தன்னுடைய ரூபவதியைப் பார்த்து, “திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்” (2:15) என்று கூறுகிறார்.
திராட்சைப் பழங்களுக்கு ஆசைப்படும் நரிகள் திராட்சைத் தோட்டத்தின் மதில்கள் மேல் ஏறியும், குழிதோண்டுவதையும் அவர் பார்க்கிறார். அவைகளை தேடிப்பிடிப்பது மிகவும் கடினம். அவைகள் இரவு வேளைகளில் ஊடுருவுகின்றது. அவைகளை இலகுவாய் எடுத்துக்கொள்ளக் கூடாது.
உங்களுடைய நெருங்கிய உறவுகளை எது அச்சுறுத்துகிறது? அது, பெரும்பாலும் பெரிய காரியமாய் இருக்காது. ஒரு சிறுவார்த்தையோ, விமர்சனமோ நம்முடைய அன்பின் வேருக்குள் ஊடுருவலாம். அவ்வப்போது ஏற்படும் சிற்சில தவறுகள் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு நல்ல, ஆழமான சிநேகத்தையோ அல்லது திருமண உறவையோ முற்றிலும் பாதிக்கும்.
அந்த சிறுநரிகளை பிடிப்பதற்கு தேவன் நமக்கு உதவி செய்வாராக! நம்முடைய திராட்சைத் தோட்டங்களை பலப்படுத்த தேவையான மன்னிப்பை கேட்பதற்கோ அல்லது கொடுப்பதற்கோ தயங்காமல் செயல்படுவோம். நமக்கு தேவையானதை தேவன் நமக்கு அருளுவாராக!