நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய அனைத்துக் கட்சிகளுக்கும் தனித்தனியாக அழைப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூட்டியுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசு, புளொட், ரெலோ ஆகிய கட்சிகளுக்கும் தனித்தனி அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்குபற்றும் என அதன் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
புளொட் தரப்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரெலோ இந்த மாநாட்டில் பங்குபற்றுமா என்பது தெரியவில்லை.
அரசுக் கூட்டணியில் பங்காளிக் கட்சிகளாக இருந்து கொண்டு, அரசுத் தலைமையுடன் முறுகிக் கொண்டு நிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 கட்சிகளுக்கும் கூட தனித்தனியாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய சர்வகட்சி மாநாடு ஒன்றைக் கூட்டும்படி அரச தலைவரான ஜனாதிபதியிடம் கோரியதே சு.கதான். அதனால் அந்தக் கட்சி அதில் கலந்துகொள்ளும் என்று தெரிகின்றது.
எனினும், விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில்ல ஆகியோரின் கட்சிகள் இந்தச் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றமாட்டா என்று கூறப்படுகின்றது. சில சமயங்களில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கட்சியும் கூட அதைப் பகிஷ்கரிக்கலாம்.
சர்வகட்சி மாநாடு நடைபெறும் 23ஆம் திகதி மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கும் ஜே.வி.பியும் இந்த மாநாட்டில் பங்குபற்றுமா என்பது தெரியவில்லை.
முன்னாள் நீதியரசர் சி.வி,விக்னேஸ்வரன் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவையும் இந்த மாநாட்டில் பங்குபற்றுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
சிறிய கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தலா ஓர் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தனின் வயோதிப நிலையைக் கருத்தில்கொண்டு, அவருடன் ஓர் உதவியாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வசதியாக தமிழரசுக்கு இரண்டு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன என மாநாட்டு ஏற்பாட்டாளர்களுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. சம்பந்தனுடன் மாநாட்டில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தச் சர்வகட்சி மாநாடு கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது