யாழ்ப்பாண நகரபிதா மணிவண்ணன் விஸ்வலிங்கத்துக்கு கனேடிய நகரபிதாக்கள் இருவரின் பாராட்டுப் பத்திரங்கள்
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற மூன்று முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்த கனடா உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், யாழ்ப்பாணம் நகரபிதா மணிவண்ணன் விஸ்வலிங்கத்துக்கு கனடிய நகரபிதாக்கள் இருவரின் பாராட்டுப் பத்திரங்களையும்கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாராளுமன்றம் சார்பான பாராட்டுப் பத்திரத்தையும் நேரடியாகக் கைளித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
கனடாவின் மார்க்கம் நகரபிதா பிராங்க் ஸ்கபட்டி மற்றும் பிரம்ரன் நகரபிதா பற்றிக் பிரவுண் ஆகியோரின் பாராட்டுப் பத்திரங்கள் மற்றும் ஸ்காபுரோ மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் வழங்கிய பாராளுமன்றம் சார்பான பாராட்டுச் சான்றிதழ் ஆகியனவே அன்றைய தினம் கையளிக்கப்பட்டன.
அவருடன் கனடாவின் 'ரூபம்' இணைய வானொலி மற்றும் 'ரூபம்'செய்தி இணையத் தளம் ஆகியவற்றின் நிறுவனர் சங்கர் சிவநாதன் திருமதி லோகேந்திரலிங்கம் ஆகியோரும் கூட இருந்தனர். மேற்படி சந்திப்பின்போது யாழ்ப்பாண நகரபிதா மணிவண்ணன் கனடிய தமிழர்களின் அயராத உழைப்பினால் அங்கு தை மாதத்தை மத்திய அரசும் மாகாண அரசாங்கங்கள் பலவும் நகரசபைகள் பலவும் 'தமிழர் மரபுரிமை மாதமாக' அங்கீரித்துள்ளதைப் பாராட்டினார்.
யாழ் மாநகர சபையின் ஆணையாளரும், மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலரும் இந்த சந்திப்பின் போது உடனிருந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அங்கு உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் உரையாற்றும் போது, யாழ்ப்பாண மாநகர சபையானது கடந்த காலங்களில் பல சிறந்த நகரபிதாக்களினாலும் ஆணையாளர்களினாலும் நிர்வகிக்கப்பட்டு வந்ததை தான் நன்கு அவதானித்த தாகவும் யாழ்ப்பாணம் மாநகர சபை இலங்கையின் ஏனைய மாநகர சபைகளைப் போன்று ஓர நிர்வாகப் பிரிவு மட்டுமல்ல. தமிழர்களின் கலை இலக்கிய பண்பாட்டுக் கோலங்களின் உறைவிடம் மற்றும் அடையாளம் என்றும் குறிப்பிட்டார்.
யாழ் மாநகர சபையின் கொடியில் காணப்படும் யாழ் என்னும் தமிழர்களின் பண்டைய இசைக்கருவி தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பை காட்டுவதாகவும் இதன் காரணமாகவே மார்க்கம் மற்றும் பிரம்டன் ஆகிய மாநகரசபைகளின் நகரபிதாக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் பாராட்டுப் பத்திரங்களை யாழ்ப்பாண நகரபிதா மணிவண்ணன் விஸ்வலிங்கம் அவர்களுக்கு தான் வழங்க முன்வந்ததாகவும் குறிப்பிட்டார்.