ஆரம்பமானது சர்வகட்சி மாநாடு - முடிவு எப்படி ஆகுமோ?கோட்டாவின் ஆலோசனைக்கு செவி சாய்க்குமா மற்றக்கட்சிகள்
சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இதில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ள போதும் பல முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளதாக தெரியவருகிறது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் தாம் இந்த சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க போதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தன.
குறித்த சர்வகட்சி மாநாடானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த மாநாட்டில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றுகையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு நன்றி.
அத்துடன் இந்த சர்வகட்சி மாநாடானது, தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான முயற்சி என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த மாநாட்டில் பங்கேற்காதிருக்க முக்கியமான சில கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ரெலோ, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளது.
எனினும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமாமஜக்கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ் அரசுக்கட்சி, புளொட், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன மாநாட்டில் பங்கேற்றுள்ளன.
மேலும், அரசாங்கத்திற்கு சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சர்வகட்சி மாநாட்டை நடத்தும் படி வலியுறுத்தி வந்த போதும், இந்த அரசாங்கம் இது தொடர்பில் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அரசாங்கம் தன்னுடைய பிரச்சினைகளை இந்த சந்தர்ப்பத்தில் மூடி மறைத்துக்கொள்வதற்காகவே, இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முனைந்திருப்பதாகவே பெரும்பாலானோர் குற்றம் சுமத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.