பெரும்பான்மைப் பலத்தை இல்லாமலாக்கி 'மொட்டு' ஆட்சிக்கு முடிவு கட்டியே தீருவோம் - கண்டியில் வைத்து விமல் சபதம்
"அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. எனவே, அரசின் சாதாரணப் பெரும்பான்மைப் பலத்தையும் விரைவில் இல்லாமல் செய்வோம். இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்." - இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில உட்பட ’11 கட்சிகள் அணி’யின் பிரதிநிதிகள் நேற்று கண்டிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றதுடன் சமகால நிலைவரம் பற்றியும் உரையாடினர். இதன்போது ‘முழு நாடும் சரியான பாதைக்கு’ எனும் தமது அணியின் வேலைத்திட்டத்தின் உள்ளடக்கங்கள் பற்றி மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட விமல்,
"நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்வைத்தோம். அமைச்சரவையில் இருந்து எம்மை நீக்கினர். ஆனால், நாம் வேலைத்திட்டத்தைக் கைவிடமாட்டோம். அதனைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மிக மோசமானவர். அவருக்கு எப்படிகே கதைப்பதென்றுகூட தெரியாது. அது சர்வக்கட்சி மாநாட்டில் புலனானது.
எனவே, இந்த அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு பயணிக்க முடியாது. எனவே, விரைவில் அரசின் சாதாரண பெரும்பான்மையையும் இல்லாமல் செய்வோம். இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" - என்றார்.