இன்றைய வேத வசனம் 26.03.2022: என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து....
ஜார்ஜ் முல்லர் இளம்பிராயத்தில் இருக்கும் போது அவருடைய கல்விச் செலவுக்கு அதிகமாக பணம் தேவைப்பட்டது.
உடனே தன்னுடைய அறை கதவை மூடிக்கொண்டு ஜெபித்தார். தேவனை நோக்கிப் பார்த்தார்.
ஜெபித்துக் கொண்டிருக்கும் போதே, அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது! உடனே திறந்து பார்த்தார்.
முல்லரின் ஆசிரியர் வந்தார். கூடவே ஒரு மாணவனையும் அழைத்து வந்தார். அவனுக்கு தன்னுடைய ஜெர்மானிய மொழியை கற்றுக் கொடுக்கவும், அதற்குரிய பணத்தை முல்லருக்கு கொடுப்பதாகவும் அந்த ஆசிரியர் கூறினார்.
ஜார்ஜ் முல்லர் தேவனை நோக்கி பார்த்தார். அதனால் அவருடைய தேவை உடனே பூர்த்தி செய்யப்பட்டது.
நாட்களோ, காலங்களோ தாழ்த்தாமல் அந்த நிமிடமே முல்லருக்கு தேவையான உதவிக் கிடைத்தது.
எரேமியா காவற்சாலையில் அடைக்கப்பட்டு திகைத்துக் கொண்டிருக்கும்போது கர்த்தருடைய வார்த்தை என்னை நோக்கிக் கூப்பிடு என்று கேட்கின்றது. எரேமியா உடனே கீழ்ப்படிந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
வேதாகம காலங்களில் தங்கள் பிரச்சனையிலிருந்து விடுபட ஜனங்கள் எல்லாரும் கர்த்தரை நோக்கி பார்த்ததாக வேதத்தில் காண்கிறோம்.
நாம் நமது தேவைகளை பூர்த்தி செய்ய அனேக நேரங்களில் மனிதர்களை நோக்கிப் பார்த்து ஏமாந்து போகிறோம்.
என் கண்கள் உம்மையே நோக்கி இருக்கிறது. என்று சொன்ன சங்கீதக்காரனை போன்று, நாம் நமது அனுதின தேவைகளுக்காகவும் பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் தேவனையே நோக்கிப் பார்ப்போம்.
அவரை நோக்கி கூப்பிடுவோம். நம் வாழ்வில் பெரிய காரியங்களைச் செய்வார். நம்மால் அறிய முடியாத காரியத்தை அறியசெய்கிறவரும், இது நடக்குமா என்று யோசிக்கும் காரியத்தில் அதிசயத்தையும், பெரிய காரியங்களையும் கர்த்தரே செய்வார்.
அவர் ஒருவரையே நோக்கிப்பார்ப்போம்.. ஆமென்..
எரேமியா 33:3
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.