IPL Match01 - டோனியின் அதிரடியால் கொல்கத்தாவுக்கு 132 ரன்கள் இலக்கு
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் களமிறங்கிய சென்னை அணியில், கான்வே, பிராவோ, மில்னே, சான்ட்னர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இணைந்திருந்தனர்.
துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற, கான்வே 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதிரடியாக ஆடிய ராபின் உத்தப்பா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அம்பதி ராயுடு 15 ரன்களிலும், ஷிவம் துபே 3 ரன்னிலும் வெளியேற, 61 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சிஎஸ்கே.
அதன்பின்னர் கேப்டன் ஜடேஜா, கீப்பர் டோனி இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணியின் ஸ்கோர் 19வது ஓவரில் 100 ரன்னை தொட்டது.
குறிப்பாக டோனியின் அதிரடி ரசிகர்களை உற்சாகமடையச் செய்தது. 38 பந்துகளில் அரை சதத்தை பதிவு செய்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
அதன்பின்னர், கடைசி பந்தில் ஜடேஜா சிக்சர் அடிக்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 26 ரன்களுடனும், டோனி 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட் எடுத்தார். வருண் சக்கரவர்த்தி, ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.