IPL Match07 - லக்னோ அணிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம், மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்கோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் கெய்க்வாட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் ராபின் உத்தப்பா, அதிரடியாக ஆடி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 27 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதம் விளாசிய உத்தப்பா, ரவி பிஷ்னோய் பந்தில் எல்.பி.டபுள்யு. முறையில் ஆட்டமிழந்தார்.
அதிரடியில் மிரட்டிய மொயீன் அலி 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 35 ரன்கள் சேர்த்தார். அம்பதி ராயுடு 20 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 27 ரன் அடிக்க, சென்னை அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது.
அதன்பின்னர் ஷிவம் துபேயின் அதிரடி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்ட அவர், 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஜடேஜாவுடன் கைகோர்த்த டோனி முதல் பந்தில் சிக்சரும், அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஜடேஜா 17 ரன்களில் ஆட்டழந்தார். பிரிட்டோரியஸ் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் டோனியுடன் பிராவோ இணைய, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. டோனி 16 ரன்களுடனும், பிராவோ 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான், ஆண்ட்ரூ டை தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.