IPL Match 08 - ரசலின் அதிரடியால் கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது.
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 137 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பனுகா ராஜபக்சே 31 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் ரகானே (12), வெங்கடேஷ் அய்யர் (3) விரைவில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 26 ரன்கள் அடித்து, நம்பிக்கை அளித்தார்.
அதன்பின்னர் சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸல் இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட ரஸ்ஸல், மிக விரைவாக 26 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 15வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து வெற்றியை உறுதி செய்தார் ரஸல். 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் அடித்த கொல்கத்தா அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஸல் ஆட்டமிழக்காமல் 71 ரன்களும், பில்லிங்ஸ் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் சேர்த்தனர்.