இலங்கையில் அவசரகால பிரகடனம் என்றால் என்ன? இதன்போது என்னவெல்லாம் நடக்கும்?

Nila
2 years ago
இலங்கையில் அவசரகால பிரகடனம் என்றால் என்ன? இதன்போது என்னவெல்லாம் நடக்கும்?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தொடர்ந்து பல செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டன.

குறிப்பாக தொடர்ச்சியாக 13 மணி நேர மின்வெட்டினை நடைமுறைப்படுத்தியதால் தென்னிலங்கை மக்கள் முதல் நாட்டில் சில பாகங்களில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் இன்று செய்யப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இவ் அவசர நிலை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேல் இந்த அவசர நிலை நீடிக்கப்பட வேண்டுமா என்று ஜனாதிபதி கோட்டாபய முடிவு செய்வார். 

பொதுவாக நிலைமை கட்டுக்கடங்காமல் போகும் போது சுமூக நிலையை உருவாக்கவே அவசரநிலையை அமல்படுத்துவது வழக்கம்.

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாள் முதல் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படும். கூடவே போலிஸாருக்கும் அதிகாரங்கள் அதிகரிக்கும்.

குறிப்பாக தேவைப்படும் ஒருவரை நீதிமன்ற உத்தரவின்றியே கைது செய்து, குறிப்பிட்ட காலம் வரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் போலிஸார் தடுத்து வைக்கமுடியும்.

தேவைப்படும் இடத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்யவும் போலிஸாருக்கு அதிகாரம் இருக்கும்.

பாதுகாப்பை பலப்படுத்த இராணுவத்தினரும் ஏனைய பாதுகாப்பு படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படலாம்.

தேவையான இடங்களில் திடீர் சோதனைச் சாவடிகள்கூட அமைக்கப்படலாம்.

பொது இடங்களில் ஆட்கள் கூடுவது மட்டுப்படுத்தப்படும்.

இது ஆர்ப்பாட்டங்கள் கலவரங்கள் உருவாவதை தடுக்க உதவும். 

ஆர்ப்பாட்ட நேரங்களில் வன்செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் போலிஸாருக்கு அனுமதி வழங்கப்படலாம்.

தேவையான இடங்களில் ஊடரங்கு சட்டங்களை பிறப்பிக்க முடியும்.

நிலைமையை முடிவு செய்ய தேவையான அதிகாரங்கள் அரசாங்க அதிபருக்கும் மஜிஸ்ட்ரேட்டுக்கும் வழங்கப்படும்.

ஊடகங்கள் மீது கட்டுப்பாடு கொண்டுவரமுடியும். தேவைப்படின் தணிக்கையும் அமுலுக்கு வரலாம்.

குறிப்பாக சமூக ஊடகங்களே வன்செயலை பரப்ப பெரும் காரணமாக கருதப்படுவதால், அவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்படியான தவறுகளை செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்படலாம். பொதுவாக நிலைமையை மிகைப்படுத்தி காண்பிப்பது, வெறுப்புணர்வுப் பிரச்சாரம் ஆகியவற்றுக்கு இங்கு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்தவரை அவசரகால நிலை இங்கு பழகிப்போன ஒன்றுதான். கடந்த 30 வருட காலப் போர் அதனை குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு பழகிப்போன ஒன்றாகச் செய்துள்ளது.

போர் முடிவுக்கு வந்ததை அடுத்து அவசரகால நிலை இங்கு நீக்கப்பட்டாலும், இங்கு இன்னமும் பயங்கரவாதச் சட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வருகின்றது.

ஆனால் தற்போது இச் சம்பவங்கள் தென்னிலங்கை மக்களுக்கு அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.