'சித்தாலேப' ஹெட்டிகொட குழுமத்தின் தலைவர், கலாநிதி விக்டர் ஹெட்டிகொட காலமானார்

#SriLanka #Death #Ayurvedic
'சித்தாலேப' ஹெட்டிகொட குழுமத்தின் தலைவர், கலாநிதி விக்டர் ஹெட்டிகொட காலமானார்

'சித்தாலேப' ஹெட்டிகொட குழுமத்தின் தலைவர், பிரபல வர்த்தகர் கலாநிதி விக்டர் ஹெட்டிகொட காலமானார். 

இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

வீட்டு வைத்தியர் என புகழ் பெற்ற 'சித்தாலேப'  ஆயுர்வேத தைலம், இலங்கை மக்களிடையே பிரபல்யமான ஒரு வலி நிவாரணியாக திகழ்கிறது.

பிரபல சித்தாலேப தயாரிப்பு நிறுவன குழுமமானது 1934ஆம் ஆண்டு, சிறுநீரக நிபுணர் மற்றும் ஜோதிடர் கலாநிதி ஹென்ட்ரிக் டி சில்வா ஹெட்டிகொடவினால் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1969 ஆம் ஆண்டில், ஹென்ட்ரிக் டி சில்வா ஹெட்டிகொடவின் ஒன்பது குழந்தைகளில் ஐந்தாவது குழந்தையான விக்டரைத் தேர்ந்தெடுத்து, தனது ஆயுர்வேத மருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்தார்.

தனது மகனை ஒரு தொழில்முனைவோராக உருவாக்குவதை ஹென்ட்ரிக் டி சில்வா நோக்கமாகக் கொண்டிருந்தார்.

விக்டர், உலகப் புகழ்பெற்ற பௌத்த மதகுரு மற்றும் தத்துவஞானி, மறைந்த வணக்கத்திற்குரிய அக்கமஹாபண்டித, பேராசிரியர் வல்பொல ஸ்ரீ ராகுல தேரரின் மருமகனும் ஆவார். அவர் மேற்கு நாடுகளில் பௌத்தத்தை பரப்பினார்.

மாத்தறை ராகுல கல்லூரியின் மாணவரான விக்டர், பின்னர் தனது தந்தையின் வழிகாட்டலின் கீழ் குடும்பத் தொழிலில் பயிற்சி பெற்றார். அவர் ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகள் ஆயுர்வேதத்தின் கோட்பாடு மற்றும் நடைமுறைகளைக் கற்றுக்கொண்டார். பண்டைய ஏடுகளின் பிரதிகள் மற்றும் புத்தகங்களை ஆராய்ந்த அவர், நடைமுறை அனுபவத்தையும் பெற்றார்.

இத்துறையில் அவருடைய அர்ப்பணிப்பும், ஆர்வமும் அவரது தந்தை ஹென்ட்ரிக் டி சில்வா ஹெட்டிகொடவினால், அவரது குடும்ப இரகசியமான, சக்தி வாய்ந்த குணப்படுத்தும் மற்றும் வலி நிவாரணி பண்புகளைக் கொண்ட தைலத்திற்கான சூத்திரம் என அறியப்படும், சித்தலேப இனை, விக்டருக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

மூன்று தலைமுறைகளைக் கடந்து வந்த ஒரு பழங்கால நடைமுறையைக் கொண்ட ஒரு நவீன இளைஞனான விக்டர் தனது முன்னோர்கள் இதற்கு முன் முயற்சி செய்யாததைச் செய்யத் தொடங்கினார். அவர் வணிக ரீதியில் சித்தலேப தயாரிப்பை தயாரித்து சந்தைப்படுத்தினார். உறவினர்களின் நிதி உதவியுடன், அவர் 1971 இல் தனது முயற்சியைத் தொடங்கினார்.

அவரது கடுமையான உழைப்பின் மூலம், நாடு முழுவதும் ஆயுர்வேத மருந்தகங்கள் உள்ளிட்ட ஏனைய சில்லறை விற்பனையாளர்களை தாங்களே தயாரிப்பை முயற்சி செய்து, வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கும்படி பரிந்துரைத்தார். அவரது முயற்சிகள் பலனளித்தன. அதன் அடிப்படையில் இன்று ஹெட்டிகொட குழுமம் ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பெரிய, பன்முகப்படுத்தப்பட்ட குழுமமாகவும், அதன் முதன்மையான தயாரிப்பாக சித்தலேபவும் திகழ்கின்றன.

ஆயுர்வேதம் மற்றும் கைத்தொழில் துறைக்கான ஹெட்டிகொடவின் பங்களிப்பை அங்கீகரித்து, 1990 ஆம் ஆண்டு "தேசபந்து - வகுப்பு I" என்ற ஜனாதிபதி விருது அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் வழங்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் தலைசிறந்த 50 தொழில்முனைவாளர் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை கலாநிதி ஹெட்டிகொட பெற்றுள்ளார். முன்னணி உள்ளூர் வர்த்தக சஞ்சிகையான LMD இன் படி, இலங்கையின் சிறந்த 100 நிறுவனங்களில் ஒன்றாக சித்தலேப குழுமம் இடம்பிடித்துள்ளது.