இன்றைய வேத வசனம் 05.04.2022: நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.
வயதின் முதிர்ச்சி தவிர்க்க முடியாது. இன்றைக்கு பல வயது சென்றோர், தங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு எடுத்ததெற்கெல்லாம் ஆலோசனை சொல்வதுண்டு.
இதுவே, அநேக இளையவர்களுக்கு நச்சரிப்பாயிருக்கும்.
"வயதாகிவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியது தானே. இந்தக் காலத்தைப் பற்றி இவர்களுக்கென்ன தெரியும்?" என்று முறுமுறுக்கின்ற பிள்ளைகள் தான் அதிகம்.
மேலும், "தாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துக் களித்துவிட்டு, இப்போ மாத்திரம் எங்களைத் தடுக்கிறார்கள்” என்று வேறு குற்றமும் சுமத்துகின்றனர் இக்காலத்துப் மனிதர்கள்.
ஆனால், "நாங்கள் பட்டு பாடனுபவித்தது போல நமது பிள்ளைகள் இவ்வுலகின் துன்பங்களில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தானே சொல்கிறோம் என்பார்கள் முதியோர்கள்.
எழுந்து நடமாடக் கடினமாயினும் அவர்கள் வாயில் பிறக்கும் வார்த்தைகள் எத்தனை பெருமதிப்பானவை. இதனை இளவயதினர் சிந்திப்பதே இல்லை.
ஆனால் தாங்கள் மூப்பெய்தும் காலம் வரும் பொழுதுதான் அன்று அப்படிச் சொன்னார்கள் என்று சிந்திக்கிறார்கள். அதனால் என்ன பயன்? காலம் கடந்திருக்குமே.
பென்ஷன் போன்ற வருமானம், அல்லது சொத்துக்கள் உள்ள பெற்றோரைப் பராமரிப்பதற்குப் பிள்ளைகள் போட்டி போடுவதும், ஒன்றுமேயில்லாத முதியோரைக் கடினமாக நடத்துவதும் இன்றைய சமுதாயத்தில் ஒன்றும் புதிதல்ல. இது எத்தனை வேதனைக்குரிய காரியம்.
நம்மைப் பெற்று வளர்த்த காலங்களில் நம் பெற்றோர் எத்தனை நாட்கள் கண் விழித்திருப்பார்கள். எத்தனை கஷ்டங்கள் பட்டிருப்பார்கள். நமக்கு காய்ச்சல் வந்தபோது பதறிப்போய் உணவையும் மறந்து பக்கத்திலேயே இருந்த அந்த பெற்றோரை மறக்க முடியுமா? சிந்தீப்பீர்! செயல்படுவீர்!
நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர். (லேவிவியராகம் 19 : 32)