இன்றைய வேதவசனம் 06.04.2022: ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.

Prathees
2 years ago
இன்றைய வேதவசனம் 06.04.2022: ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.

ஒருமுறை இலங்கையில் வாழும் போதகர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள இந்தியாவில் இருந்து சில மிஷனரிகள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

அந்த மிஷனரிகள் இலங்கை தேசத்தில் இறுதி போர் நடந்த, முல்லைத்தீவு பகுதியில் இருக்கும் புதுக்குடியிருப்பில் தேவ ஊழியம் செய்யும் ஆண்ட்ரூ என்ற போதகரை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை கேட்டறிந்தனர்.

அந்த போதகர் கூறுகையில்:-

நான் புலிகள் இயக்கத்தில் இருந்தவன். என்னை மூன்று முறை விஷப்பாம்புகள் காலில் கொட்டியது. ஆனால் அந்த மூன்று முறையும் நான் தப்பித்துக் கொண்டேன்.

அப்பொழுது என் நண்பர்கள் உன்னை குறித்த தேவன் ஏதே ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். உனக்காக நாங்கள் ஜெபிக்கிறோம், நீ மனம் திரும்பு என்று சொன்னார்கள்.

அதை ஏற்றுக் கொண்டு நான் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியே வந்தது மட்டுமல்லாமல் எல்லாவித வன்முறைகளையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.

ஆனால், மறுபடியும் என்னை ஒரு விஷ பாம்பு கடித்தது. அப்பொழுது நான் இயேசுவிடம், இந்த முறையும் நான் உயிர் பிழைத்துக் கொண்டால், நீர் உண்மையாகவே என்னை நேசிக்கிறார் என்பதை நான்  ஏற்றுக்கொள்கிறேன் எனறேன்.

அந்த முறையும் எனக்கு எந்த ஒரு சேதமும் இன்றி உயிர் தப்பினேன். அப்பொழுது எனக்குள் ஒரு பெரிய விசுவாசம் வந்தது, தேவனுக்காக என்னால் முடிந்த ஊழியத்தை செய்ய ஆரம்பித்தேன்.

புதுக்குடியிருப்பு பகுதியில் மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் என் ஒன்பது பிள்ளைகளுடன் சேர்ந்து ஊழியம் செய்தேன்.

ஆனால் கடைசி யுத்தம் வந்தப்பொழுது, தமிழ் புலிகள் இயக்கத்திலிருந்து எல்லாம் தமிழ் குடும்பங்களில் இருந்தும் ஒருவர் யுத்தத்திற்கு வரவேண்டும் என்றுச் சொல்லி அனைவரையும் வழுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்றனர்.

அவர்கள் எங்கள் வீட்டிற்கும் என் மூத்த மகனை இழுத்து செல்வதற்காக வந்தார்கள்.
நான் அவர்கள் காலில் விழுந்து கெஞ்சினேன். மூத்த மகனை நான் தேவனுக்காக கொடுத்து இருக்கிறேன், அதனால் எனது இளைய மகனை அழைத்துச் செல்லுங்கள் என்றேன். ஆனால் அவர்கள் கேட்காமல் என் மூத்த மகனை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

2009ஆம் வருடம், பிப்ரவரி மாதம், இரண்டாவது வாரம் இந்த சம்பவம் நடத்து. இரண்டு வாரங்கள் கழித்து ஒரு செய்தி வந்தது யுத்தத்தில் என் மூத்த மகன் இறந்துவிட்டான் அவன் பிணத்தை மாவீரன் அடக்கப்படும் இடத்தில் அடக்கம் பண்ணி விட்டோம் என்பதாக.

இந்த செய்தியினால் என் உள்ளம் உடைந்தது போல் இருந்தது ஊழியத்திற்காக ஒப்புக் கொண்டுத்த என் மகன் இப்படி இறந்து விட்டானே என்று அழுது கொண்டிருந்த வேளையில், மீண்டும் வந்து இரண்டாவது மகனையும் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

இதன் மத்தியில் ஏப்ரல் மாதம் கடைசி யுத்தம் வந்ததினால் ஒரு பக்கம் இலங்கை ராணுவம் நெருக்கியது. எனவே உயிர் தப்பித்துக் கொள்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி ஓடினோம்.

அப்பொழுது ஒரு விசுவாசி ஒரு சிறு பையனை கொடுத்து இந்த பயனையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். அந்தப் பையனையும் தூக்கிக்கொண்டு ஓடி வந்தோம். ஒரு சிறிய கூடாரம் அமைத்து தங்கியிருந்தோம்!

அந்தப் பகுதியில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான குண்டுகள் வந்து விழும். அனேகர் கொத்துக்கொத்தாக இறந்து போவார்கள், ஆனால் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியாது.
அதனால் தினந்தோறும் ஜெபிப்போம்! ஆண்டவரே எங்களை காத்துக்கொள்ளும் இந்த மக்களை காத்துக்கொள்ளும் என்று.

ஒருநாள் இலங்கை ராணுவம் வீசிய குண்டு எங்கள் கூடாரத்தின் பகுதியில் விழுந்தது. ஒரே கூச்சல், ஒரே புகைமூட்டம் அந்த புகை மூட்டம் மறைந்தவுடன் பார்த்தேன்  வலது பக்கத்தில் என் மனைவி பிணமாக கிடந்தாள். முன்பக்கமாக என் மகள் பிணமாக கிடந்தாள். இடது பக்கத்தில் இரண்டு பிள்ளைகள் பிணமாக கிடந்தார்கள்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! ஆண்டவரிடம் என்ன சொல்வதென்றே புரியவில்லை!
நான் யோசிப்பதற்குள்ளாக ஒரு சிறிய அழுகுரல் கேட்டது. நான் திரும்பி பார்த்தபோது, அந்த சிறு பையனின் வயிற்றுப் பகுதியில் ஒரு துண்டு துழைத்ததால் சிறுகுடலை கையில் பிடித்தவாறு உட்கார்ந்திருந்தான்.

அதைப் பார்த்தவுடன் அந்த பையனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று, என் குடும்பத்தின் பிணங்களை அங்கேயே விட்டுவிட்டு, என் கழுத்தில் இருந்த துண்டை எடுத்து அவன் வயிற்றில் கட்டிக் கொண்டு மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த முகாமை நோக்கி ஓடினேன்.

அப்பொழுது இன்னும் ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு டார்ச் லைட்டை அடித்து பார்த்தேன். அங்கு ஒரு அம்மா உட்காந்து இருந்தார்கள். ஒரு சின்ன குழந்தை தாய்பால் குடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த அம்மாவின் தலையில்லை.

தாய்பாலை குடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு குண்டு வந்து அம்மாவின் தலையை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டது. அந்த பிள்ளை அது தெரியாமல் அழுது கொண்டிருந்தது. இதை பார்த்த எனக்கு இருதயம் வெடித்தது போலிருந்தது! பித்து பிடித்தவன் போல் அப்படியே நின்றுவிட்டேன்.

இந்த மோசமான சூழ்நிலையில் என்னை ஒரு முகாமில் கொண்டு வைத்தார்கள். மூன்று மாதங்கள் பித்துப் பிடித்தவனைப் போல உட்கார்ந்து இருந்தேன். ரோபோ மாதிரி வருவேன் சாப்பாடு வாங்கி சாப்பிடுவேன் ரோபோ மாதிரி போயிடுவேன்.

இந்த நாட்களில் எங்களை பற்றி பல செய்திகளை இணையதளத்தில் போட ஆரம்பித்தார்கள்.

கனடாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் எங்கள் உறவினர்கள் எங்களை தேட ஆரம்பித்தார்கள்.
கடைசியாக புலிகள் இயக்கத்திற்கு இழுத்து செல்லப்பட்ட என் மூன்றாவது மகன் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து உயிர்பிழைத்து வந்து என்னை தேடி முகாமில் கண்டுபிடித்தான்.

நான் என் மகனை கட்டி பிடித்து அழுதேன் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வெளிநாட்டில் இருந்த என் உறவினர்கள் எல்லாரும் வந்தார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
நான் படிப்படியாக சுகம் அடைந்து வரும் வேளையில் இயேசு கிறிஸ்து என்னோடு இடைப்பட்டு பேச ஆரம்பித்தார்.

என் மகனே இது நீ அன்பு செலுத்த வேண்டிய நேரம் என்றார்.

இலங்கை இராணுவத்தாலும், தமிழ் புலிகள் இயக்கத்தாலும் எல்லாவற்றையும் இழந்த பிறகு யாரிடம் ஆண்டவரை அன்பு செலுத்துவது? என்று கண்ணீருடன் கேட்டேன்.

நான் அப்படி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே பரிசுத்த ஆவியானவர் என்னை நிரப்பினார் நான் கொஞ்ச நேரம் அழுதேன், ஜெபித்தேன் ஆண்டர்வர் மறுபடியும் என்னுடன் பேச ஆரம்பித்தார்.

அப்பொழுது சொன்னார் உன்னை பலவந்தம் பண்ணும் பொழுது, இரண்டு மைல் தூரம் நடக்க வேண்டும் அது தான் அன்பின் அடையாளம் என்றார்.

நான் மறுபடியும் ஆண்டவரே எங்கே என நடக்க சொல்லுகிறிர் என்றேன். மறுபடியும் புதுக்குடியிருப்புக்கு போக வேண்டும் என்றார்.

அது எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது அங்கு சென்றால் என் இறந்த மகன்கள் ஞாபகம் வரும் மனைவியின் ஞாபகம் வரும் என்று யோசித்தேன்.

ஒரு வாரம் கழித்து என் உறவினர்களிடம் சொன்னேன் நான் ஆஸ்திரேலியாவோ கனடாவோ வரவில்லை நான் இங்கு இருந்து ஊழியம் செய்யப் போகிறேன் என்றேன்.

என் மகன் கேட்டான் உங்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது என்று, நான் சொன்னேன் ஆமாம் இயேசுவின் மேல் பைத்தியம் பிடித்துவிட்டது என்று, இது அடுத்த மைல் தூரம் என்னை நடக்க வைக்கிறது என்றேன்.

என் மகனையும் அழைத்துக்கொண்டு சென்று அங்கு சிதறிகிடந்த மக்களை இனைத்து மூன்று சபையை ஆரம்பித்து, யார் எங்களை வெறுத்தார்களோ அந்த சிங்களர்களுக்கு இயேசுவை அறிவிக்கும் ஒரு ஊழியக்காரனாய் இயேசு என்னை மாற்றினார்.

பிலிப்பியர் 4:11
ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!