அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த தவறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை!

Reha
2 years ago
அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த தவறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை!

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள், தீ வைத்தல் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காணொளி ஆதாரங்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் பலர் எதிர்வரும் காலங்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த முடிந்தபோதும், அவ்வாறு அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த தவறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கலவரம் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்வதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காவல்துறையினரை ஒத்த உடையும், வெள்ளை பாதுகாப்பு தலைக்கவசமும் அணிந்த நிலையில், ஆர்ப்பாட்டக் கூட்டமொன்றில் உரையாற்றிய நபரொருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் உரையாற்றும் காணொளி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதாகவும், குறித்த நபர் காவல்துறை உத்தியோகத்தரா? அல்லது வேறு நபரா? என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.