தற்போதைய இலங்கை நிலவரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட கருத்து!

#SriLanka #International #Lanka4
Reha
2 years ago
தற்போதைய இலங்கை நிலவரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட கருத்து!

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கின்றது.

தமது ஒப்பந்தத்தின் 4 ஆம் சரத்தின் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கையுடனான இருதரப்புக்கலந்துரையாடல்கள் மற்றும் பொருளாதார நிலைவரம் குறித்த மதிப்பீடுகளைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பித்து, 20 ஆம் திகதி முடிவிற்குக்கொண்டுவந்திருந்தது. 

இலங்கை பற்றிய சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவின் முழுமையான மதிப்பீட்டு அறிக்கை கடந்த மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தம்மிடம் நிதியுதவிக்கான கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில், அதற்கான பேச்சுவார்த்தைகளை வெகுவிரையில் ஆரம்பிக்கவிருப்பதாக கடந்த முதலாம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாகப்பேச்சாளர் கூறியிருந்ததுடன் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விஜயத்தின்போது இதுகுறித்துக் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அமைச்சரவை அமைச்சர்களும் தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததன் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

இந்நிலையிலேயே இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் மசாஹிரோ நொஸாகி தெரிவித்தள்ளார்.

அத்தோடு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் வொஷிங்டனுக்கு வருகைதரும்போது அவருடன் இலங்கைக்கான உதவி வழங்கல் குறித்துக் கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் ஜனாதிபதியினால் நேற்று முன்தினம் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி, நேற்றைய தினம் அவரது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.