இன்றைய வேத வசனம் 09.04.2022: உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்
நம் வாழ்வில் கசப்பான சம்பவங்கள் நடக்கும் பொழுது, ஏன் ஆண்டவரே என்னை படைத்தீர்? என்று கேட்கிறோம். ஆனால் இதன் மூலம் நீர் எனக்கு என்ன கற்றுத்தரப் போகிறீர் என்பதை நாம் கேட்பதில்லை.
ஒரு உண்மை சம்பவத்தை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 1930 ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரு சகோதரி, தன் 16வது வயதில் தேவன் தரிசனமாகி, உன்னை அகில உலகத்திற்கும் ஆசீர்வாதமாக வைக்கப் போகிறேன். என்று சொன்னார்.
இந்த தரிசனத்தை பெற்ற அந்த சகோதரியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. சில ஆண்டுகள் கழித்து தேவனுடைய வழி நடத்தலின் படி அமெரிக்காவிற்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் படியாய் சென்றார்கள்.
மிகுந்த ஆத்தும பாரத்தோடு அமெரிக்கா சென்று சகோதரி, லாஸ் ஏஞ்சலஸ் பட்டணத்தில் ஒரு விடுதியில் தன்னுடைய உடமைகளை வைத்துவிட்டு சுவிஷேசம் அறிவிக்கும் படியாய் வெளியே வந்தார்கள்.
அவர்கள் வெளியே வந்த இரண்டாவது நிமிடத்தில், 6 பேர் கொண்ட கும்பல் அந்த சகோதரியை கடத்தி சென்றது. அந்த சகோதரி ஒரு இருளான இடத்திற்கு தூக்கி செல்லப்பட்டார்கள். அங்கு அந்த கும்பலால் கற்பழிக்கபட்டு காலை 4 மணியளவில் ரோட்டில் நிர்வாணமாய் வீசப்பட்டார்கள்.
ரோட்டில் இருந்தவாரே, அந்த சகோதரி ஆண்டவரே என்னை உலகம் முழுவதற்கும் ஆசீர்வாதமாக பயன்படுத்துவேன் என்று சொன்னீரே! என்னை ஏன் இந்த கொடுமைக்கு ஒப்புக்கொடுத்தீர்? என்று கதற ஆரம்பித்தார்!
ஒரு வயதான நபர் அந்த சகோதரியை கண்டு, மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தார்.
விடுதி அறையில் முழங்கால்படியிட்டு, ஏன் ஆண்டவரே எனக்கு இதை அனுமதித்தீர்? என்று ஆறு மாத காலம் கதறினாள். அப்படி தினம் தினம் அழுது சோர்ந்து போனாள்.
ஆறு மாதத்திற்கு பின்பு, ஆண்டவர் வந்து சொன்னார். ஏனென்று கேட்காதே! இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று கேள் என்றார்!
அந்த சகோதரி மிகவும் வருத்தமுடன், இதிலிருந்து நான் என்ன ஆண்டவரை கற்றுக்கொள்ள முடியும்? என் சுயமரியாதையை நான் இழந்துவிட்டேனே என்று ஆண்டவர் பாதத்தில் கதறினாள்.
மறுபடியும் மூன்று மாதங்கள் அழுதாள். மூன்று மாதத்திற்கு பின்பு இயேசு மீண்டும் வந்து சொன்னார். பக்கத்தில் இருக்கும் நூலகத்திற்கு போ என்றார். அடுத்த கட்டிடம்தான் நூலகம் என்பதால், உடனே அந்த சகோதரி நூலகத்திற்கு சென்றார்.
நூலகத்தில் ஒரு செய்தித்தாள் இருந்தது அதை எடுத்துப் பார்த்தாள். அன்றைக்கு கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் மரித்த செய்தி இருந்தது. அந்த செய்தியை ஆராய ஆரம்பித்தாள்.
அந்தக் காலகட்டத்தில், ஒரு நிமிஷத்தில் ஒரு பெண் அல்லது இரண்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் அந்த தேசத்தில். அந்த செய்தியைக் கேள்விப்பட்ட அந்த சகோதரியின் உள்ளம் மிகவும் உடைந்தது.
ஐயோ! ஒரு நாளைக்கு இத்தனை பேர்கள் கற்பழிக்கப்படுகிறார்களா! இவருடைய வாழ்க்கை என்னாவது? அவர்களுடைய எதிர்காலம் என்னாவது? என்று தனக்காக அழுவதை நிறுத்திவிட்டு மற்றவர்களுக்காக அழ ஆரம்பித்தாள்.
ஆண்டவரே, இந்த தேசத்தில் இப்படியான கொடுமைகள் நடக்கிறது. இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்? நான் என்ன செய்ய வேண்டும்? என்று திரும்பத் திரும்ப அழுது ஜெபித்தாள்.
ஆண்டவர் பேச ஆரம்பித்தார். அதன் வலி என்னவென்று உனக்குத் தெரியும்! அதனால் அவர்களுக்கு ஆறுதல் கூறு என்றார்.
சிறு துண்டு சீட்டில், கற்ப்பழிக்கப்பட்டு மன உலைச்சலில் இருப்பவர்கள் தொடர்புகொள்ளுங்கள் என்று எழுதி கடை வீதிகளில் ஒட்ட ஆரம்பித்தாள்.
தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தது. அனேகர் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றார்கள். அவர்களுக்கு இயேசுவின் அன்பையும் சொல்ல ஆரம்பித்தாள் அந்த சகோதரி.
நண்பர்களே, இன்று உலகம் முழுவதும் Rape Victim Helpline ஆரம்பிக்கப்பட்டது அந்த சகோதரியின் வாயிலாகத்தான்.
நீங்களும் வாழ்க்கையில் கசப்பான காரியம் வரும்போது, ஆண்டவரிடம் ஏன் என்று கேட்காதீர்கள். அதன் மூலமாக இருக்கும் நோக்கம் என்னவென்று கேளுங்கள்.
இன்று சிலர் வாழ்க்கையில் காயத்தோடு இருக்கிறீர்கள். அந்த வலியின் நிமித்தம் ஆண்டவரிடம் ஏன் என்னை படைத்தீர்? என்று கேட்காதீர்கள்.
வேதம் சொல்லுகிறது:
அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? (ரோமர் 9:20-21)
ஒரு குயவன் எப்படி கனமான பாத்திரமாகவும் கனவீனமான பாத்திரமாகவும் செய்து பயன்படுத்த முடியுமோ,
அதே போல, தேவன் உங்களை என்ன நோக்கத்திற்கு படைத்தாரோ, என்ன நோக்கத்திற்கு அழைத்தாரோ அதற்காக உங்களை பயன்படுத்துவார்.
எனவே நீங்கள் முறுமுறுத்து தேவ அழைப்பை இழந்து போகாதீர்கள்! தேவன் தாமே உங்களை வழி நடத்துவாராக. ஆமென்!
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். (ஆதியாகமம் 50:20)