IPL Match18 - அதிரடி பந்துவீச்சால் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான்
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் அதிரடியாக ஆடி 36 பந்தில் 50 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். படிக்கல் 29 ரன், அஸ்வின் 28 ரன்னில் அவுட்டானார்.
லக்னோ அணி சார்பில் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே கேப்டன் கே எல் ராகுல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த பந்தில் கிருஷ்ணப்பா கவுதம் டக் அவுட்டானார். ஹோல்டர் 8 ரன்னிலும், தீபக் ஹூடா 25 ரன்னிலும், ஆயுஷ் பதோனி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் குயிண்டன் டி காக் நிதானமாக ஆடினார். அவர் 39 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்ட்யா 22 ரன்னிலும், சமீரா 13 ரன்னிலும் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் போராடினார். 4 சிக்சர் உள்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், லக்னோ அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.
ராஜஸ்தான் சார்பில் சாஹல் 4 விக்கெட்டும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.