பார்பிகியு இயந்திரத்தால் மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

பார்பிகியு இயந்திரத்தை அறையில் இயக்க நிலையில் வைத்தவாறு நித்திரைக்குச் சென்ற மூவர்,மயக்கமான நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
20, 30 மற்றும் 48 வயதான மூவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல்- மஹவ பகுதியிலிருந்து 8 பேர் அடங்கிய குழுவொன்று, நேற்று (11) நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளதுடன், நுவரெலியா- மாகஸ்தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர்.
குறித்த குழுவினர் இன்று அதிகாலை வரை விருந்துபசாரம் ஒன்றையும் நடத்தியுள்ளதுடன், அவர்களுள் மூவர் இன்று அதிகாலை 3 மணியளவில் குளிர் தாங்க முடியாமல் பார்பிகியு இயந்திரத்தை அறைக்குள் வைத்து விட்டு நித்திரைக்குச் சென்றுள்ளனர்.
குறித்த மூவரும் இன்று காலை நித்திரை விட்டு எழுந்திருக்காததை அவதானித்த ஏனையவர்கள் அறைக்குள் வந்து பார்த்த போது, மூவரும் மயக்கமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மூவரும் நுவரெலியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.



