இன்றைய வேத வசனம் 15.04.2022: உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 15.04.2022:  உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?

பொதுவாக எல்லோருக்கும் நீடிய ஆயுளுடன் வாழனும் எனற ஆசை இருக்கும். அப்படி இல்லாவிட்டால் கூட அல்ப ஆயுசில் மரிப்பதற்க்கு யாரும் விரும்புவதில்லை.

என்னதான் ஒரு மனுஷன் நீடிய ஆயுளுக்கு ஆசைப்பட்டாலும், அது எல்லாருக்கும் சாத்தியமா? அதைப்பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன கற்றுக் கொடுக்கிறது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நமது காலத்திற்கு முன்பாக நமக்கு மரணம் நிகழுமா? மரணத்திற்கென்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு காலம் குறிக்கப்பட்டிருக்கிறது.

அந்த குறிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாக ஒரு மனிதனுக்கு மரணம் வருமா? அப்படின்னு கேட்டீங்கன்னா, பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் வரும்!

வரும் அப்படினா, எப்படிப்பட்ட நபர்களுக்கு வரும் அதையும் வேதாகமம் மறைத்து வைக்கவில்லை, பிரசங்கி 7ம் அதிகாரம் 17ம் வசனம் இப்படி சொல்கிறது.

"மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?" (பிரசங்கி 7:17)

மிஞ்சின துஷ்டனாகயிருந்தாலும் காலத்திற்கு முன்பாக மரணம் வரும். அதிக பேதையாய் இருந்தாலும் காலத்திற்கு முன்பாக மரணம் வரும்.

ஆம், மிஞ்சின துஷ்டன் துணிந்து அயோக்கியத்தனம் செய்கிறவர்கள், மிதமிஞ்சி பாவங்களை செய்துகொண்டிருக்கிறவர்கள் தங்கள் காலத்திற்கு முன்பாக ஏதாவது வழியில் மரணமடைந்து விடுவார்கள் என்பதை தான் வேதம் போதிக்கிறது.

இது ஒருவிதமான மக்கள் இன்னொரு விதமான மக்களை பார்த்தீர்களென்றால் அதிக பேதையாய் இருப்பது. அதாவது முட்டாள்தனமாய் இருப்பது.

இப்படிப்பட்டவர்களை எவ்வளவுதான் நல்ல விஷயங்களை புரியும்படி கண்ணுங்கருத்துமாக கற்றுக் கொடுத்தாலும், அதன் மதிப்பை உணராமல் அதை அசட்டை செய்து அலட்சியமான வாழ்க்கை வாழ்வார்கள். அதற்குப் பெயர் தான் பேதமை.

அப்படிப்பட்டவர்களுக்கும் தங்களுடைய காலத்திற்கு முன்பாகவே மரணம் வரும் என்று சாலமோன் ஞானி கூறுகிறார்!

இதே கருத்தை லூக்கா எழுதின சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்து வித்தியாசமாகவும், ஆழமாகவும் கற்றுக்கொடுக்கிறார்.

இப்பொழுது சொல்லப்போகிற வசனங்கள் யூதர்களுக்கும் இஸ்ரேலுக்கும் சொல்லப்பட்ட வசனங்கள் என்றாலும், இது இன்றைக்கு நம்முடைய வாழ்க்கைக்கு பொருந்தவே பொருந்தாது என்று சொல்லி விடவே முடியாது!

லூக்கா 13:1-5 வசனங்களில் ரோம ஆளுநர் பிலாத்து பலி செலுத்த வந்த சில கலிலேயர்களை ஏதோ ஒரு காரணத்திற்காக வெட்டிக் கொல்கிறான். அவர்களுடைய இரத்தத்தையும், பலிகளுடைய இரத்தத்தையும் ஒன்றாக கலக்க செய்கிறான்.

இந்தக் கோர செய்தியை சில சமய தலைவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் வந்து அறிவிக்கிறார்கள். அவர்கள் எந்த எண்ணத்தோடு வந்து அறிவிக்கிறார்கள் என்று பார்த்தீர்களானால்.

பலி செலுத்த வந்த இடத்திலேயே அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றால், அவர்களெல்லாரும் எப்படிப்பட்ட பாவிகளாக இருந்திருப்பார்கள். என்ற நினைப்போடு வந்து அந்த செய்தியை இயேசு கிறிஸ்துவிடம் அறிவிக்கிறார்கள்.

இதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட இயேசு கிறிஸ்து அவர்களிடம் சொல்கிறார்,

அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள். அப்படின்னு எச்சரிக்கிறார் (லூக்கா 13:3)

இயேசு கிறிஸ்து இங்கு என்ன கற்றுக் கொடுக்கிறார் என்றால், செத்துப் போனவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்க்காமல், உயிரோடு இருக்கிற நீங்கள் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறார்கள் என்று பாருங்கள் என்று போதிக்கிறார்.

உலகத்திற்காக வாழ்கிறீர்களா? தேவனுக்காக வாழ்கிறார்களா? என்று உங்களை நீங்களே நிதானித்துப் பாருங்கள் என்று ஆழமாக எச்சரிக்கிறார்.

எச்சரிப்பதோடு நிறுத்தாமல், நீங்கள் மனந்திரும்பாமல் போனால், அந்த ரோமர்கள் கலிலேயர்களை கொலை செய்தது போல நீங்களும் கெட்டுப் போவீர்கள் என்று சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து இன்னொரு சம்பவத்தையும் இயேசு கிறிஸ்து எடுத்துக் காட்டுகிறார். சீலோவாம் என்ற இடத்தில் கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றுபோட்டது.

அதில் சிக்கி திடீரென்று எதிர்பாராத விதத்தில் இறந்தவர்கள் எல்லாம் அன்றைக்கு எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைத்து விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு மறுபடியும் சொல்லுகிறார்.

அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறார். (லூக்கா 13:5)

ஆண்டவர் எச்சரித்தது போலவே நடந்ததை நாம் வரலாற்றில் படிக்கிறோம். அது அன்றைக்கும் சரி, இந்த வசனம் இன்று நம்முடைய வாழ்வில் எவ்வாறு எச்சரிக்கிறது என்பதை பார்ப்போம்.

நாமும் கிறிஸ்துவின் கிருபையை அசட்டை பண்ணி மனந்திரும்பாமல் போவோமானால் நாமும் கெட்டுப் போவது உறுதி

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், தொடர்ந்த ஆண்டவரின் சத்தத்திற்க்கு செவிகொடமல் இருதயத்தை மிகவும் கடினப்படுத்தி மனம் போல வாழ்ந்து வந்தாலோ, சரீர இச்சைகளை நிறைவேற்ற குரியாக இருந்தாலோ காலத்திற்கு முன்பாக மரணம் வருவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

நாம ஒரு வேளை அசால்டாக நினைக்கலாம், அந்த கள்வனை போல கடைசி நேரத்தில் மன்னிப்பு கேட்டு பரலோகத்துக்கு போய் விடுவேன் என்று. இப்படிப்பட்ட பொல்லாத மனுஷனின் நினைவுகள் ஆண்டவருக்கு தெரியாதா என்ன?

அப்போஸ்தலன் பவுல் 1கொரி 11:29,30ல் சொல்கிறார், திருவிருந்தில் பங்குகொள்ளும் பொழுது யாராவது அபாத்திரமாக பங்கு கொண்டிருந்தால், அதன் மூலமாய் பெலவீனப்பட்டவர்கள் இருக்கிறார்கள், வியாதிபட்டவர்கள் இருக்கிறார்கள், ஏன் மரணம் அடைந்தவர்கள்கூட இருக்கிறார்கள். பாத்தீங்களா?

கர்த்தருடைய பந்தியில் அபாத்திரமாய் பங்கு பெறுபவர்கள் மரணமடைவார்கள் அப்படினா, மனந்திரும்புவதற்கு எத்தனையோ தருணங்கள் கிடைத்தும் மனந்திரும்பாமல் முரட்டாட்டம் செய்கிறவர்களுக்கு தன் காலத்திற்கு முன்பாக மரணம் வராது அப்படினு எப்படி சொல்ல முடியும்!

மனம் திரும்புகிறது என்றால் என்னைக்கோ ஒரு நாள் மனம் திரும்புவது என்று இயேசு பேசவில்லை மாறாக, ஒவ்வொரு நாளும் நம்முடைய பழைய கெட்ட சிந்தனைகள், கெட்ட குணங்கள், கெட்ட பேச்சுகள், கெட்ட நடத்தைகளில்யிருந்து அனுதினமும் மனம் திரும்புகிறதைப் பற்றி இயேசு பேசுகிறார்.

இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் அன்பின் தேவ ஜனமே, உங்களை கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன் துணிந்து பாவம் செய்யாதீர்கள். தேவன் கொடுக்கும் இரட்சிப்பை விளையாட்டாக எண்ணாதீர்கள்.

நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று ஞானஸ்நானத்தை தள்ளிப் போடாதீர்கள்.

நான் சொல்லும் ஞானஸ்தானம் குழந்தை ஞானஸ்தானம் அல்ல அது வேதத்திற்கு புறம்பானது ஞானம் வந்த பிறகு எடுக்கும் ஞானஸ்தானம் அதனால் தான் இயேசு கிறிஸ்து தன் முப்பதாவது வயதிலே ஞானஸ்நானம் எடுத்து நமக்கு முன்மாதிரியை வைத்துசென்றார்.

ஆமாங்க நாம கடைசி காலத்தில் இருக்கும் தீவிரமாக யோசித்து பார்த்து நல்ல முடிவு எடுக்க வேண்டிய காலத்தில் இருக்கும்.

மிஞ்சின துஷ்டனாக இருக்க வேண்டாம் உங்கள் காலத்திற்கு முன்பாக ஏன் நீங்கள் சாக வேண்டும்?

அதிக பேதையாய் இருக்க வேண்டாம் உங்கள் காலத்திற்கு முன்பாக ஏன் நீங்கள் சாக வேண்டும்?

மனந்திரும்புதளை அற்பமாய் நிணைக்க வேண்டாம் படைக்கப்பட்ட நோக்கத்தை நாம் ஏன் நிறைவேற்றாமல் சாகவேண்டும்?

கொஞ்சம் நிதானித்து பாருங்கள். ஏதோ ஏதோ காரணத்தினால் நம்மை சுற்றி அனேக மரணங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எத்தனை அசம்பாவிதங்கள் நடக்கிறது எத்தனை கொள்ளை நோய்கள் பரவுகிறது.

அதிலே ஏன் நம்முடைய மரணம் சம்பவிக்கவில்லை? நாம் ரொம்ப யோக்கியமா என்ன? இல்லங்க நாம் மனம் திரும்புவதற்கு கர்த்தர் நமக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

துணிகரமாக பாவம் செய்துகொண்டே ஊழியம் செய்து மனுஷனை ஏமாற்றலாம், ஆனால் தேவன் ஒருபோதும் ஏமாற்ற முடியாது.

இப்பொழுது எல்லாம் நாம் பரிசுத்தமாய் பேசுவதை எல்லாம் பரிசுத்தம் என்று நினைத்து விட்டோம். இல்லங்க அதற்குப் பெயர் மாய்மாலம். பரிசுத்தமாய் வாழ்வது தான் பரிசுத்தம்.

இனி காலம் செல்லாது. முதலில் நாம் மனம் திரும்புவோம் பின்பு அநேகரை மனந்திரும்புதலுக்குள் நடத்துவோம்.

ஆமென்.