இலங்கையில் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி! எதிர்காலத்தில் நடக்க போவது என்ன?

Nila
2 years ago
இலங்கையில்  தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி! எதிர்காலத்தில் நடக்க போவது என்ன?
இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன இந்த விடயத்தை வெளிப்படுத்துகிறார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“இலங்கையில் எதிர்வரும் நாட்களில் பெட்ரோலியம், மருந்து, உணவு உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி மேலும் மோசமடையலாம். இலங்கையில் தற்போது 100 மில்லியன் டொலர் அளவே வெளிநாட்டு கையிருப்பு மாத்திரமே உள்ளது. அதனை கொண்டு எதுவும் செய்ய முடியாது. இதனால் எதிர்காலத்தில் வட்டி வீதம் 25 வீதம் வரை உயரலாம்.

புற்று நோயாளர் ஒருவரின் கை, கால்களை ஒவ்வொன்றாக வெட்டி அவரது உயிரை காப்பாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகள் போன்றே இலங்கையின் பொருளாதாரத்தை காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

முதல் நாணயச் சபைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் மாபெரும் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார். அவர் எடுத்த வட்டி அதிகரிப்பு முடிவு சரியானது. எனினும் போதுமான வட்டி அதிகரிப்பு அல்ல. மத்திய வங்கி தற்போது சரியான பாதையில் செல்கின்றது.

தற்போதைய ஆளுநர் முதலாவது உரையில் கூறியது போன்று இனிமேல் மக்களுக்கான சுயாதீன மத்திய வங்கி ஒன்று செயற்படும் என்பதனை உறுதியாக கூற முடியும்.

இதேவேளை, காகிதம் கூட காணாமல் போகும் அளவுக்கு பணம் அச்சிட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு நாணயச் சபையே காரணம் என மத்திய வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர்காலத்தில் எண்ணெய், மருந்து, உணவு போன்றவற்றைக் கொண்டு வருவதில் பெரிய சிக்கல்கள் ஏற்படும். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது. எனினும் அது ஒரே நேரத்தில் முழுமையாக கிடைத்து விடாது. அது மூன்று வருட தவனை அடிப்படையிலேயே வழங்கப்படும். 

இந்தக் கடனை விடப் பெறுமதியானது, சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றதன் பின்னர் இலங்கை பெறும் நம்பிக்கையாகும். ஆனால் தற்போது கடனை நிறுத்தி வைத்த நாடாக இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அதுவே இலங்கையின் ஆளுமைத் தன்மையைக் குறைக்கக் காரணமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.