இன்றைய வேத வசனம் 16.04.2022: உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது ; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய் பார்க்கக்கடவது
பறவைகள், விலங்குகள், ஊரும் பிராணிகள் என்று ஆண்டவர் எல்லாவற்றையும் படைத்தார் என்று வேதத்தில் படிக்கிறோம். ஆனால் நாம் 5 அறிவு படைத்த எவற்றையும் கண்டு கொள்வதில்லை.
கர்த்தர் எல்லாவற்றிற்கும் ஒரு விளக்கம் கொடுத்தும் காண்பித்திருக்கிறார்.
புறா அனைவரும் விரும்பும் ஒரு மென்மையான பறவை இனமாகும். ஆண்டவராகிய இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவர் மீது புறா வடிவில் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார் (#மத்தேயு 3:16) என்று வாசிக்கிறோம்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நோவாவையும் அவனுடைய குடும்பத்தாரையும் காப்பாற்றியபோது, வெள்ளம் வற்றியதைக் குறிக்கும் வகையில் புறா தன் அலகில் ஒலிவக் கிளையைக் கொண்டு வந்து செய்தி சொன்னதை நாம் பார்க்கிறோம் (#ஆதியாகமம் 8 : 1-12 ).
இப்படிப்பட்ட புறாவினிடத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்களைக் குறித்து இன்று பார்ப்போம்.
புறாவானது கபடற்றது, எதிர்த்து போரிடாது. ஒரு கோழியைப் பிடித்தோமென்றால் அது பயங்கரமாக சத்தம் போடும் . கால்களையும் இறக்கைகளையும் அடித்துக் கொள்ளும்.
ஆனால் புறாவைப் பிடித்தால் எவ்வித எதிர்ப்பையும் அது காட்டாது. ஆபத்து மிகவும் நெருங்கி வந்த பின்தான் பறந்து போகும். புறா எதிர்த்து போராடாது.
"புறாக்களைப் போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்" (#மத்தேயு 10:16) என்று வேதம் சொல்கிறது.
உள் மனதிலும், வெளியே பேசுவதிலும் ஒன்று போல பேசுவது, செயல் படுவதுமான குணம் கபடற்ற குணம். புறாவை போல கபடற்றவர்களாக வாழுங்கள்.
ஒரே கவனம்
புறாவின் தலை குறுகியதாக இருப்பதால் அவற்றால் ஒரே நேரத்தில் ஒரு பொருளின் மீது மட்டுமே கவனம் செலுத்த முடியும். எனவே புறா எப்பொழுதும் ஒரே கவனத்தோடு தான் இருக்கும்.
“உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது ; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய் பார்க்கக்கடவது ” ( நீதிமொழிகள் 4:25 )
அன்பான நண்பர்களே! புறாவைப் போல கபடற்றவர்களாகவும், நேர் கொண்ட பார்வையோடு கவனமாக அதே பாதையில் ஓடுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார்.
ஆமென்!