இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி

Nila
2 years ago
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் இன பாகுபாட்டை கடந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

 இனினும் மீண்டும் மீண்டும் தமிழர்கள் ஓரங்கட்டப்படும் நிகழ்வுகளே அரங்கேற்றப்பட்டு வருகின்றன. 
 
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் பத்தாவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் நேற்றையதினம் தேசிய கீதம் பாடப்பட்டது. எனினும் இனம், மொழிகளை கடந்து ஒற்றுமையாக நடைபெறும் ஆர்ப்பாட்டம் என வர்ணிக்கப்பட்ட போதும், தனி சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 
 
ஏன் தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதற்காக நான் காத்திருந்தேன் -ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது இடம்பெறவில்லை. 
 
இது சிறுபான்மையினத்தவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் மீறல்களிற்கு ஒரு உதாரணம். மொழி உரிமை மீறல் என்பது தமிழர்கள் அன்றாடம் அனுபவிக்கும் தொடர்ச்சியான அமைதியான மீறல்.
 
ஏன் அதனை தமிழில் பாடவில்லை- சிங்களம் பேசாத எழுதாத வாசிக்காத மக்கள் உள்ளனர் என மக்கள் சிந்திப்பதில்லை என்பதே எனது அனுபவம்.

தமிழ் உத்தியோகபூர்வமொழி   என்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மக்களால் தங்களால் சொந்த மொழியில் உரையாட முடியாவிட்டால் அது அவர்களிற்கான சேவையை மறுக்கின்றது.
 
உதாரணத்திற்கு  நான் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவில் பல முறை சுட்டிக்காட்டிய போதிலும் எனக்கு சிங்களத்திலேயே ஆவணங்களை கையளித்தனர்.
 
இது பெரும்பான்மை மனப்பான்மை இயல்பானதாகவும் ஆழமாக வேரூன்றியதாகவும் இருப்பதை காண்பிக்கின்றது. 
 
இழக்கப்பட்ட இன்னொரு தருணத்தை வேறு ஒன்றாக இது இருப்பதை தவிர்ப்பதற்காக இதனை சவாலிற்கு உட்படுத்தவேண்டும்.
 
இந்த தொழில்முறை பாடகர் குழுவால் பாடப்பட்டது. இது போராட்டக்காரர்களின் தன்னெழுச்சியான செயல் இல்லை, மாறாக ஆர்ப்பாட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு எனத் தெரிவித்துள்ளார்.