இன்றைய வேத வசனம் 19.04.2022: புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும்.. ஜனத்தைக்கூட்டி
புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும்.. ஜனத்தைக்கூட்டி. உபாகமம் 31:12-13
பல இன மக்கள் ஒன்றாய் இணைந்து தேவனை ஆராதித்து, பாடல்களை மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தனர். ஆனால் அந்த களைத்துப்போயிந்த தாயினால் ஆராதிக்க முடியவில்லை.
அழுதுகொண்டிருந்த தன் குழந்தையை ஒருபுறம் தாலாட்ட, மறுபுறம் தன் ஐந்து வயதான பிள்ளைக்கு பாடல் புத்தகத்தை பிடித்துக்கொண்டு, இன்னொருபுறம் நடைபழகும் தன்னுடைய மற்றொரு பிள்ளை ஓடிவிடாமல் பார்த்துகொண்டிருந்தாள்.
இதை அவளுக்குப்பின் அமர்ந்து கவனித்த ஒரு முதியவர், நடைபழகும் பிள்ளையை ஆலய வளாகத்தில் நடக்கவைக்க அழைத்து சென்றார். மற்றொரு வாலிபப் பெண், மூத்த பிள்ளைக்கு பாடல் புத்தகத்தை தான் பிடித்துக்கொள்வதாக செய்கையில் சொன்னாள்.
இரண்டு நிமிடங்களில், அந்த தாயின் களைப்பு மாறி, தன் கண்களை மூடி, நிம்மதி பெருமூச்சோடு தேவனை ஆராதித்தாள்.
ஆண்கள், பெண்கள், சிறியோர், பெரியோர், மூத்த விசுவாசிகள், புதிய விசுவாசிகள் என அனைவரும் தன்னை ஆராதிக்க வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார்.
இஸ்ரவேலின் கோத்திரங்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்குமுன், மோசே அவர்களை ஆசிர்வதிக்கும்படி அனைவரும் கூடிவருமாறு அறிவுறுத்துகிறார். “புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு.. உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும்” (உபாகமம் 31:12-13) எனக் கூறுகிறார். நாம் வாழ்வில் எந்நிலையிலிருந்தாலும், அவருடைய ஜனங்கள் அவரை ஆராதிக்க அவர்களை நாம் ஒன்றுகூட்டுவது தேவனை கனப்படுத்தும் செயல்.
அத்திருச்சபையில் அன்று காலையிலே, அந்த தாயும், அந்த முதியவரும், அந்த வாலிபப் பெண்ணும் தேவ அன்பை பகிர்ந்து அனுபவித்தனர். ஒருவேளை நீங்களும் அடுத்தமுறை சபைக்கு செல்லும்போது, உதவுவதின் மூலம் தேவ அன்பை வெளிப்படுத்தவோ அல்லது கருணையின் செயலை அவருடைய கிருபையாக ஏற்றுக்கொள்ளவோ செய்யலாம்.