ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 322 பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Mayoorikka
2 years ago
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 322 பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 322 பணியாளர்கள் உணவு விஷம் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இன்று (20) காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வாந்தி, வயிற்றுவலி, உடல்வலி போன்ற அறிகுறிகளால் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (19) பிற்பகல் உணவு நச்சுத்தன்மையினால் உணவு வழங்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து இன்று காலை ஆடை தொழிற்சாலை பஸ்கள் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் 50 ஊழியர்கள் உணவு விஷம் காரணமாக ஹபராதுவ களுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பிரமோத சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

ஆடைத் தொழிற்சாலையினால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஆடைத் தொழிற்சாலை ஊடாக வழங்கப்படும் உணவு மற்றும் நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.