பொது போக்குவரத்து சேவைகள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது

Prathees
2 years ago
பொது போக்குவரத்து சேவைகள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது

பல அரச ஊழியர் சங்கங்கள் இணைந்து நாளை நடத்தவுள்ள பணிப்புறக்கணிப்பில் புகையிரத மற்றும் இலங்கை போக்குவரத்து சபை இணைந்து கொள்ளாது எனவும் தனியார் பேருந்து சேவைகள் பணிப்புறக்கணிப்பில் கலந்து கொள்ளாது எனவும் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து சேவைகள் தொழிற்சங்கங்களுடன் நேற்று  இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஏற்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் வழமையான பொது போக்குவரத்து சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

போக்குவரத்து அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாளைய தினம் இடம்பெறும் பொது போக்குவரத்து சேவைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் அரச உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது தேவையற்றது எனவும் இதனால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் சங்கடப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புகையிரதங்களில் மேற்கொள்ளப்படும் சில தொழிற்சங்க நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்ற நிலையில், பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சியளிக்கவோ அல்லது சேவையில் ஈடுபடுத்தவோ நடவடிக்கை எடுக்காதது ஏன் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் புகையிரத தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியதாகவும் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாது இருப்பதற்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசியல் நெருக்கடிகளை சேர்த்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடிக்கு தீர்வாக பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றால், அரசாங்கத்தை ஒப்படைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது, ஆனால் அரசாங்கத்தை கைப்பற்ற எவரும் முன்வரவில்லை.

தற்போதைய நெருக்கடியை அரசாங்கம் அறிந்திருப்பதாகவும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார். எந்தக் குழு ஆட்சிக்கு வந்தாலும், இந்த நெருக்கடியை சமாளிக்க கால அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

காலி முகத்திடலில் திரண்ட இளைஞர்களிடம் கோரிக்கை எதுவும் இல்லை எனவும், இந்த பிரச்சினைக்கு அவர்களிடம் தீர்வு இல்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.