மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொது மக்களிடம் கருத்து கோர நடவடிக்கை!

#SriLanka #Electricity Bill #Lanka4
Reha
2 years ago
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொது மக்களிடம் கருத்து கோர நடவடிக்கை!

அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கோரலை நடத்தவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கான திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையை அண்மையில் கேட்டறிந்ததாக ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீர் மின் பற்றாக்குறையால் அதிக எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரு அலகு மின்சாரத்துக்கான செலவு அதிகரித்துள்ளது.

இலங்கை மின்சார சபை ஒரு அலகு மின்சாரத்துக்கு 53 ரூபாவை செலவழித்த போதிலும், நுகர்வோர் ஒருவருக்கு 16 ரூபாவே அறவிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், கடந்த 8 வருடங்களாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவில்லையென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை திருத்தும் காலப்பகுதி குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.