அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் அமைதியின்மை! ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல்?

Nila
2 years ago
அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் அமைதியின்மை! ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல்?

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாகவும் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மைனா கோ கம என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இடத்தில், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டக்காரர்களின் கோஷங்களை முடக்கும் வகையில், அலரிமாளிகையில் ஒலிப்பெருக்கி ஊடாக மிகவும் சத்தமாக பிரித் ஓதப்பட்டு இடையூறு விளைவிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

அதேநேரம், இங்குள்ள போராட்டக்கார்களுக்கு எதிராக, குறித்த பகுதியின் நடைப்பாதைகளில் பொலிஸார் பஸ்கள் உள்ளிட்ட பொலிஸ் வாகனங்களையும் நிறுத்தியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் இன்று காலை குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றுவதற்கு கொள்ளுபிட்டி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர், குறித்த பகுதியில் நிறுதிவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறுப்படுத்துமாறு கோரியிருந்தனர்.

எனினும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்கள் யார் என்பது தெரியாததனால் அதனை அப்புறப்படுத்த முடியாது என பொலிஸார் தெரிவித்திருந்ததாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்தநிலையிலேயே இன்றைய தினம் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்த போது, வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை பகிரங்கப்படுத்துமாறு போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

இதன்காரணமாக பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, குறித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட  ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நபர் அம்பியூலன்ஸின் உதவியுடன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பிக்கு ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.