இலங்கையில் ராஜபக்ஷக்கள் குடும்பத்தினர் வளர்ந்த கதை: தேசியத் தலைவராக உருவெடுத்த மஹிந்த
மஹிந்த ராஜபக்ஷ மனித உரிமை ஆர்வலராக உருவெடுத்த காலகட்டத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளிலும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் வெகுவாக நடைபெற்றாலும் மஹிந்தவின் கவனம் நாட்டின் தென்பகுதி மீதே இருந்தது.
"வடக்கு - கிழக்கு விவகாரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், தென் பகுதி சிங்கள மக்களின் மனித உரிமை காவலர் என்ற பெயரை இழக்க அவர் தயாராக இல்லை" என்கிறார் அந்த காலகட்டத்தில் அவரோடு இணைந்து செயல்பட்டுவந்த மனித உரிமை ஆர்வலரும் அரசியல் செயல்பாட்டாளருமான குஷால் பெரேரா.
இதற்கிடையில் சில சம்பவங்கள் இலங்கையில் நடைபெற்றிருந்தன. சிறிமாவோ பண்டாரநாயகவின் மகள் சந்திரிகாவின் கணவர் விஜேய குமாரதுங்கே கொல்லப்பட்டார். இதற்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனுக்குச் சென்ற சந்திரிகா குமாரதுங்க, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு தொடக்கத்தில், நாடு திரும்பினார்.
மஹிந்த தொடர்ந்து தென் பகுதியின் மனித உரிமை விவகாரங்களைப் பேசுவதிலும் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிரான குரலை ஒலிப்பதிலும் நாடாளுமன்றத்தில் தீவிரமாக இயங்கிவந்தார். அந்தத் தருணத்தில், பல அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன.
இதனை எதிர்த்து என்ன செய்யலாம் என விவாதித்தபோது, பாத யாத்திரை நடத்தலாம் என யோசனை தெரிவித்தார் குஷால் பெரேரா. "மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை ஏற்படுத்திய தாக்கம் என் மனதில் இருந்தது. ஆகவே, அதேபோன்ற பாத யாத்திரையை கொழும்பிலிருந்து கதிர்காமம்வரை நடத்தலாம் என தெரிவித்தேன்" என்கிறார் குஷால் பெரேரா.
கொழும்புவில் துவங்கி கடற்கரை ஓரமாகவே, காலி சாலை வழியாகச் செல்லும் அந்த யாத்திரை கொழும்பு, காலி, மாத்தர மாவட்டங்களைக் கடந்து அம்பாந்தோட்டையை அடைந்து மொனேராகல பகுதியை அடையுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்தார் பிரேமதாச. அப்படியான சூழலில் இந்த பாத யாத்திரையை எப்படி வெற்றிகரமாக நடத்த முடியுமெனப் பலரும் கேள்வியெழுப்பினர்.
இருந்தபோதும் மஹிந்த தீவிரமாக ஆதரவு திரட்ட ஆரம்பித்தார். இந்த பாத யாத்திரையில் நான்கு பிரதானமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1. 1988-90 ஆம் ஆண்டுகளில் நடந்த கலவரம், அதையொட்டிய அரசின் நடவடிக்கைகளில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து அரசு அறிவிக்க வேண்டும். 2. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். 3. தனியார்மயமாக்கலை நிறுத்த வேண்டும். 4. உரிமைக்காக போராடிவரும் குழுக்களுடன் சண்டையிடாமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இந்த பாத யாத்திரை மார்ச் 17ஆம் தேதிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமை தொடர்பான மிகப் பெரிய பொதுக் கூட்டம் ஒன்றும் கொழும்பு நகரில் மஹிந்த தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்டது. அரசுக்கு எதிர்த்தரப்பில் இருந்த பலரும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்தத் தருணத்திலேயே மஹிந்தவின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கதாக உயர ஆரம்பித்தது.
இதற்குப் பிறகு, பாத யாத்திரைக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக செய்யப்பட்டன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலிருந்த சிறிமாவோ அது குறித்து ஏதும் குறிப்பிடவில்லையென்றாலும், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த யாத்திரையில் பங்கேற்றனர். சந்திரிகா குமாரதுங்கவும்கூட பாத யாத்திரை துவங்கிய தினத்தில் அதில் பங்கேற்றார். மிகப் பெரிய ஊடக கவனமும் அந்த பாத யாத்திரைக்குக் கிடைத்தது. தோல்வியால் சோர்வுற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அந்த பாத யாத்திரை பெரும் உற்சாகத்தை அளித்தது.
இந்த பாத யாத்திரை மாத்தர பகுதியை அடைந்தபோது, மஹிந்த தற்போது பிரபலமான குரக்கன் சால்வையை அணிந்துகொண்டார்.
ராஜபக்ஷக்களின் சொந்த ஊரான வீரகெட்டியவிலும் அம்பாந்தோட்டை பகுதியிலும் குரக்கன் எனப்படும் கேப்பை பெருமளவில் விளைந்துவந்தது. வாக்குப் பெட்டிகளை அடையாளமாக வைத்து தேர்தல் நடந்த காலத்தில், தன்னுடைய வாக்குப் பெட்டியின் நிறமாக கேப்பையின் நிறத்தைத் தேர்வுசெய்தார் மஹிந்தவின் பெரியப்பாவான டான் மேத்யு ராஜபக்ஷ.
அந்தத் தேர்தலில் அவர் வெற்றிபெற்ற பிறகு, அதே நிறத்தில் அவர் சால்வை அணிய ஆரம்பித்தார். அப்போதிலிருந்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அந்த நிறத்தில் சால்வையை அணிந்து வந்தனர். பாத யாத்திரைக்கு முன்பாக ராஜபக்ஷ சகோதரர்களின் சாமல் ராஜபக்ஷ மட்டும் அவ்வப்போது அந்த சால்வை அணிந்து வந்தார்.
இந்த யாத்திரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மட்டுமல்லாது, இலங்கை அரசியல் பரப்பிலும் மஹிந்தவுக்கு ஒரு முக்கிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. "இந்தத் தருணத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஒரு தேசியத் தலைவராக உயர்ந்தார்", என்கிறார் குஷால் பெரேரா.
இந்தத் தருணத்தில்தான் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, மே 1 ஆம் தேதியன்று கொழும்பு நகரின் ஆர்மர் வீதியில் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். அப்போது மாகாண சபை தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டிருந்தது. பிரேமதாசவின் மரணம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பிரேமதாச கொல்லப்பட்ட பிறகு, பிரதமராக இருந்த டிங்கிரி பண்டா விஜேதுங்க ஜனாதிபதியானார். ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், தேர்தல் களத்தில் இருவரும் ஈர்ப்பை ஏற்படுத்துபவர்களாக இல்லை.
மாறாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த போன்றவர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். பல தேர்தல் கூட்டங்களுக்கு மஹிந்த அழைக்கப்பட்டார். மூன்று மாகாண சபைகளுக்கு நடந்த தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைச் சந்தித்தது.
இதற்கு நடுவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சில மாற்றங்கள் நடந்தன. சிறிமாவோவின் மகனும் சந்திரிகாவின் சகோதரருமான அனுர பண்டாரநாயக கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டார். ஆகவே, அக்கட்சியின் அடுத்த தலைமை சந்திரா குமாரதுங்க என்பது உறுதியானது.
1994ல் ஜூனில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் மஹிந்தவுக்கு இருந்த செல்வாக்கை வைத்துப் பார்க்கும்போது, தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றால், மஹிந்த நிச்சயம் அமைச்சராகக்கூடும் எனப் பலரும் கருதினார்கள்.
தேர்தல் முடிவுகள் வெளியானபோது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உதவியுடன் ஆட்சியமைத்தார் சந்திரிகா. உடனடியாக ப்ளாட், ஈரோஸ், டெலோ, டக்ளஸ் தேவானந்தாவின் இபிடிபி ஆகியவை அரசுக்கு தங்கள் ஆதரவை அளித்தன.
எதிர்பார்த்தபடியே மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரானார். ஆனால், அவர் எதிர்பார்த்த அமைச்சரவை வேறு. கிடைத்த அமைச்சரவை வேறு. அதற்குக் காரணம் இருந்தது.
பிபிசி