தனியார் எரிபொருள் பௌசர்கள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Mayoorikka
2 years ago
தனியார் எரிபொருள் பௌசர்கள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தனியார் எரிபொருள் பௌசர்கள், சேவையில் இருந்து விலகினால், அரசாங்கத்துக்கு சொந்தமான பௌசர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பௌசர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுத்ததையடுத்து, இன்று (30) நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அரசு, எரிபொருள் உரிமையாளர்கள் மற்றும் தனியார் ஆகிய 3 பிரிவினர்களால் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தனியார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஏனைய இரு பிரிவினரையும் பயன்படுத்துவோம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஏற்கெனவே, 2021 ஜூலை  மாதம் முதல் அனைவரும் ஒப்புக்கொண்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி 84% கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு பணியமர்த்தப்பட்டவர்களுக்கான கட்டணங்கள் 5 முறை மாற்றப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.