இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி வழங்குமாறு கோரும் பசில் நெருக்கடியில் ஜனாதிபதி?

Nila
2 years ago
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி வழங்குமாறு கோரும் பசில்   நெருக்கடியில் ஜனாதிபதி?

நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின் அதனை தன்னால் செய்ய முடியும் என பசில் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர், தனக்கு இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் அதற்கு பதில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவர் மீண்டும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதி சபாநாயகர் பதவி தொடர்பான வாக்கெடுப்பின் போது பொதுஜன பெரமுன மற்றும் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த அணியினர் இணைந்து வாக்களித்தனர்.

ஆளும் தரப்பின் சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட ரஞ்சித் சியம்பாலப்பிட்டியவுக்கு 148 வாக்குகள் கிடைத்தன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி முற்றாக பசில் ராஜபக்சவின் அரசியல் வெற்றியென பொதுஜன பெரமுனவின் பசில் ஆதரவாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.