ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கடும் வாக்குவாதம்! விசேட அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?

Mayoorikka
2 years ago
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கடும் வாக்குவாதம்! விசேட அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?

 பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த உறுதிமொழி ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் பிரதமர் பதவி விலகி புதிய அமைச்சரவை அமையவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

ஆனால் பிரதமர் பதவி விலகுவதால் பிரச்சினை தீராது என்று அமைச்சர்கள் எடுத்துக்கூறியபோதும் ஜனாதிபதி ஏற்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

‘ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து பதவிகளை இராஜினாமா செய்வதில் அர்த்தமில்லை’ என்று பிரதமர் கூறியபோதும் அதனை ஏற்காத ஜனாதிபதி, இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டிற்கு முக்கியத்துவமளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதென்றும், அதன்பின்னர் புதிய அமைச்சரவையை திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நியமிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தம்மிடம் கோரவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

பிரதமர் இராஜினாமா செய்யும் எவ்வித எதிர்பார்ப்போ, ஆயத்தமோ இல்லையென அவர் கூறினார்.

பிரதமரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியினால் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பிரதமர் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.