அவசரகால நிலை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் விசேட ஊடக அறிக்கை.

Nila
1 year ago
அவசரகால நிலை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் விசேட ஊடக அறிக்கை.

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான வலுப்பெற்றிருக்கும் நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு அமுலாகும் வகையில் அவசரகால சட்டம் ஜனாதிபதியால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவசரகால நிலை தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தி பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கை.

நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமைதியான முறையில் தமது போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தும் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையை நாம் அனைவரும் மதிக்கின்றோம் என்பதை குறிப்பிட வேண்டும்.

இருந்த போதிலும், விஷேடமாக நேற்றும் கடந்த சில நாட்களாகவும் அமைதிப் போராட்டமாக நடைபெற்று வந்த போராட்டத்தை மாற்றி மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் விதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் ஹர்த்தால்களால் பொதுவாக அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் என்பதே யதார்த்தமாகும்.

நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பொருட்படுத்தாமல் ஆத்திரமூட்டும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்துகொள்வதுடன், சட்டம், ஒழுங்கைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், நாட்டின் பொதுச் சட்டத்தை அவமதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, சட்டத்தை மதிக்கும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை கொண்டுச் செல்வவதற்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டும், பொது அமைதியைப் பேணுவதற்கும், மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும், சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கமைய 2022 மே மாதம் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கடினமான காலகட்டத்தில் நாட்டிலுள்ள பொறுப்புள்ள பிரஜைகள் என்ற வகையில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும் எனவும், இதுபோன்ற அவசரநிலைகளில் நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி, அனைவரின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் முப்படை மற்றும் பொலிஸாருக்கு உங்களது மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக் கொள்கின்றது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.