அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்னாள் சபாநாயகர் விடுத்துள்ள வேண்டுகோள்

Prathees
2 years ago
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்னாள் சபாநாயகர் விடுத்துள்ள வேண்டுகோள்

அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் அது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் எனவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானிப்பது சகல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும் எனவும், அதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எழுந்து நிற்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.

அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி இது குறித்து முடிவெடுக்க அவகாசம் வழங்க வேண்டும்.

மே மாதம் 6ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கையானது நாட்டில் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை மேலும் மோசமாக்கலாம்.

ஒரு பொறுப்புள்ள சிவில் சமூக அமைப்பாக, மக்களின் அடிப்படை உரிமைகளான பேச்சு, கருத்து, அமைப்பு மற்றும் ஒன்றுகூடல் உரிமை உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் இந்த முயற்சியை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அவசரகால உத்தரவுகள் நியாயமானதா, இன்னும் அவை சட்டத்திற்கு உட்பட்டதா என்பதை பரிசீலிக்க வேண்டியது பாராளுமன்றத்தின் தவிர்க்க முடியாத பொறுப்பாகும்.

எனவே இது தொடர்பான முழுமையான விவாதத்தின் பின்னர் பாராளுமன்றம் இதற்கு அனுசரணை வழங்குவதா இல்லையா என்பதை உடனடியாக தீர்மானிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

எனவே, பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு கௌரவ சபாநாயகரைக் கோருவது இத்தருணத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சித் தலைவர்களின் முதல் பொறுப்பாகும்.

நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில், அரசாங்கம் தனது அடக்குமுறைப் பொறிமுறையை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

எவ்வாறாயினும், தற்போதைய நெருக்கடிக்கு இது ஒரு தீர்வை வழங்கும் என்று நாங்கள் நம்பவில்லை.

அது முதலில் மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பறிக்கும்.

அதற்கிணங்க, நாட்டின் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தக்கூடிய இத்தகைய சட்டங்களை அமுல்படுத்துவது சர்வதேச சமூகத்தை எம்மிடமிருந்து மேலும் அந்நியப்படுத்தக் கூடும்.

அதேநேரம், இவ்வாறானதொரு நிலை நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் திறனைக் குறைக்கும்.

இவ்வாறானதொரு பின்னணி இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்குவதுடன் இந்நாட்டு மக்களை மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளும்.

நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு விரைவான தீர்வு காண்பதற்கு அவசியமான அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கும் இது பெரும் தடையாக இருக்கும்.

அத்தகைய சூழலை உருவாக்குவது நாடு விழுந்துள்ள பாதாளத்தை மேலும் ஆழப்படுத்தலாம்.

 எனவே இந்த அவசரகால உத்தரவுகளை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கௌரவ ஜனாதிபதி அவர்களை வலியுறுத்துகின்றோம்.

இல்லை என்றால் அடுத்த வார தொடக்கத்தில் இந்த விடயத்தை எடுத்து சட்டமாக்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பாகும் எனவும்இ அதனை உடனடியாக இந்த நாட்டிலுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்துகிறோம்.