தேசிய ஐக்கிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகும் கரு ஜயசூரிய ?

Nila
2 years ago
தேசிய ஐக்கிய இடைக்கால அரசாங்கத்தின்  பிரதமராகும் கரு ஜயசூரிய ?

தேசிய ஐக்கிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிப்பதற்கு பல பிரதான கட்சிகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த 13 யோசனைகளுக்கு அமைய தேசிய ஐக்கிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படவுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு இணக்கம்  தெரிவித்திருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று முன்தினம் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தன்னால் ஒரு தீர்மானம் எடுக்க முடியாது எனவும், தமது கட்சியுடன் கலந்துரையாடிய பின்னர் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய நேற்று முன்தினம் கூடிய கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரேரணைக்கு அமைய தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நீண்ட நேரம் கலந்துரையாடி இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சஜித் பிரேமதாச, தான் பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை எனவும், நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் என்பதால், ஒருவரை விட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை நியமிப்பதே முக்கியம் எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கு கரு ஜயசூரியவே பொருத்தமானவர் என ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மகாநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது. 

அனுபவம் வாய்ந்த, முதிர்ந்த, சர்வதேச சமூகத்துடன் நல்லுறவைக் கொண்ட, ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத, கட்சி அரசியலுக்கு வெளியே உள்ள, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவர் அதை முறியடிக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு இன்றியமையாதவர் என்பது தெளிவாகிறது.

எனவே, இந்த சவாலை எதிர்கொள்ள இணைந்து செயற்படுவதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் தற்போது கரு ஜயசூரிய சிறந்த தெரிவு என்பதை பல தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கரு ஜயசூரியவை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க பதவி விலக முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேவையெனின் கரு ஜயசூரியவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கத் தயார் எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.