இத்தனை நிலைக்கு காரணமான ஜனாதிபதியே முதலில் பதவி விலகியிருக்க வேண்டும்: சிறிதரன்

இத்தனை நிலைக்குக் காரணமான ஜனாதிபதியே முதலில் பதவி விலகியிருக்க வேண்டும் எனவும் சமகால நிலை தொடர்பில் தமிழ் இளைஞர்கள் அமைதி காக்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் சமகால நிலை தொடர்பில் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாடு அலங்கோலமான மிக மோசமான நிலையை எட்டியிருக்கின்றது. வன்முறை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. ராஜபக்சக்களின் குண்டர்கள் நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் இடங்களிற்குள் புகுந்து அவர்களைத் தாக்கியிருக்கின்றார்கள்.
அதனால் கோபம் கொண்ட எமது மக்கள் மாவட்டங்கள் தோறும் வன்முறைகளைக் கையில் எடுத்திருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு நிலைகுலைந்திருக்கின்றது. இந்த நாடு மிக மோசமான நிலைக்குள் தள்ளிச்சென்றுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மக்களிடம் நான் ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கின்றேன்.
நாங்கள் இந்த இடைக்காலத்தில் நிதானமாகவும், பொறுமையாகவும் எங்களது நிலைகளைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தமிழ் இளைஞர்கள் கடைப்பிடித்த அமைதியும் நிதானமும் எங்களுக்கு ஒரு பெரு வெற்றியைத் தந்திருக்கின்றது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



