தனித்து ஓர் எம்.பியாகத் தெரிவாகி தலைமை அமைச்சராகும் அதிசயம்!

#SriLanka #Ranil wickremesinghe #Prime Minister
தனித்து ஓர் எம்.பியாகத் தெரிவாகி தலைமை அமைச்சராகும் அதிசயம்!

தமது கட்சியின் சார்பில் தனித்து ஏக எம்.பியாக - அதுவும் தேசியப்பட்டியல் மூலம் - நாடாளுமன்றம் சென்ற ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேறு தரப்புகளோடு கூட்டணி அமைக்காமலேயே பிரதமராகும் அதிசயம் இன்று நடைபெறுகின்றது.

தற்போதும் கொழும்பு அரசியலில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளைச் சாணக்கியமாகப் பயன்படுத்தி காய்களை நகர்த்திய அவர் அதன் மூலம் பிரதமர் பதவியை இன்று ஏற்கும் வாய்ப்பை சுவீகரித்துக் கொண்டார் எனத் தெரியவருகின்றது.

தாம் இன்று பிரதமராகப் பதவியேற்கும் விவரங்களைப் பிற கட்சித் தலைவர்களுக்கு நேற்று அவரே உறுதிப்படுத்தினார் என அறியவந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று நேரடியாகச் சந்தித்துப் பேச்சு நடத்திய ரணில் விக்கிரமசிங்க அதனை அடுத்து ஏனைய கட்சிகளின் தலைவர்களுடனும் பிரமுகர்களுடனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார்.

தாம் இன்று பிரதமராகப் பதவியேற்கின்றார் என்ற செய்தியை அப்போது அவர்களுக்கு ரணில் தெரியப்படுத்தினார். பல தலைவர்களையும் தொடர்பு கொண்டு அவர் ஆதரவு கோரினார் எனவும் தெரிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியினர், அதிலிருந்து வெளியேறி இப்போது சுயாதீனமாகச் செயற்படும் குழுவினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எனப் பழைய மொட்டுக் கட்சி அரசின் உறுப்பினர்கள் அனைவரும் ரணிலின் அரசில் இணைய இணக்கம் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இதனால் அவரது அரசும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்புத் தாராளமாக இருப்பதாகத் தெரிகின்றது. இதேநேரம் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்தும் பல எம்.பிக்கள் குத்துக்கரணம் அடித்து ரணிலின் அரசில் இணைவார்கள் என்று சில வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இன்று ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே பிரதமராகப் பதவியேற்பார்.

பின்னர் ஜனாதிபதியோடு அவர் கலந்தாலோசனை செய்து அமைச்சர்கள் பட்டியலைத் தயாரிப்பார். அதன் பின்னர் அமைச்சர்கள் பதவியேற்பு எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன..