புதிய பிரதமர் பதவியேற்பு: இந்தியாவில் இருந்து உரம் - அமெரிக்காவிலிருந்து மருந்து ஏற்றுமதி

#SriLanka #Ranil wickremesinghe #Dollar
புதிய பிரதமர் பதவியேற்பு: இந்தியாவில் இருந்து உரம் - அமெரிக்காவிலிருந்து மருந்து ஏற்றுமதி


அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று மேலும் சரிந்தது.
 
நாட்டிலுள்ள பல முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலருக்கான விற்பனை விலையை 365 ரூபாவாக நிர்ணயித்துள்ளன. நேற்றைய தினம் இதன் பெறுமதி 380 ரூபாவாக பதிவானதன் பின்னணியில் இது அமைந்துள்ளது.

அரச வங்கியொன்று இன்று டொலரின் பெறுமதி 364 ரூபா 96 சதமாக நிர்ணயித்திருந்தது.

இதற்கிடையில், இன்று பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது மற்றும் குறுகிய காலத்தில் அதன் வர்த்தகம் வேகமாக அதிகரித்தது. முதல் 10 நிமிடங்களில், அதன் பங்கு மதிப்பு 252 அதிகரித்துள்ளது.

இதேவேளை, தற்போதுள்ள கடனுதவியின் கீழ் இலங்கைக்கு யாலைப் பருவத்தில் நெற்செய்கைக்குத் தேவையான முழு யூரியாவையும் உடனடியாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிணங்க, இந்திய அரசாங்கம் 65,000 மெற்றிக் தொன் யூரியாவை நெற்செய்கைக்காக யாலா பருவத்தில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அவசரகால மருந்துகளை ஏற்றிச் செல்லும் கப்பலை இலங்கைக்கு அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புதிய பிரதமராக நேற்று பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார். இவர் இலங்கையின் 26வது பிரதமர் ஆவார்.